search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது.
    • 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை ஆகியவை நடக்கிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு கொலுச்சாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்புவோர், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

    மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு வருகிற 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னொரு காலத்தில் மஹிசாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம். அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    Next Story
    ×