search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா
    X

    வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் முழுமையாக நிரம்பி இருக்கும் அழகிய காட்சி.

    மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா

    • மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி. 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா கொடியேற்றம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடை பெறுகிறது. முன்னதாக, கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளு கின்றனர்.

    தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காம தேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். பிப்ரவரி 3-ந் தேதி 11-ம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பா டாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.

    பிப்ரவரி 4-ந் தேதி சுவாமி யும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர்.

    தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தரு ளுகின்றனர். பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர். விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும். மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×