search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையுடன் கோவிலுக்கு வந்து கைவரிசை காட்டி காரில் பறந்த தம்பதி
    X

    குழந்தையுடன் கோவிலுக்கு வந்து கைவரிசை காட்டி காரில் பறந்த தம்பதி

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • தாலியை திருடிவிட்டு காரில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த திருவிழாவின் போது இரண்டு தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவர்.

    மதுரை காளியம்மன் தினமும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அப்போது அம்மனின் கழுத்தில் தாலி பொட்டு, கருகமணி, தாலி குண்டு, மாங்கல்யம், தங்க தாலி சங்கிலி உள்ளிட்டவை அணிவிக்கப்படும்.

    அதன்படி நேற்று கோவில் பூசாரி மருதை அம்மனுகு சிறப்பு அலங்காரம் செய்து நகைகளை அணிவித்தார். பின்னர் அவர் பூஜைகள் செய்தார்.

    இந்த நிலையில் ஒரு குடும்பத்தினர் அம்மன் முன் அமர்ந்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து கோவில் பூசாரி மருதை மடப்பள்ளிக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு அம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.

    அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 15 பவுன் தாலி சங்கிலி திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

    அறங்காவலர் குழுத்தலைவர் விஜய் ஆனந்த், தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்ற பிறகு தான் தாலி திருடப்பட்டது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் தாலியை திருடிவிட்டு காரில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்துடன் வந்து அம்மன் தாலி சங்கிலியை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடிவருகின்றனர்.

    இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×