search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள பகுதியில்   தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்
    X

    தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள பகுதியில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்

    • குலசேகரன்பட்டினம் அருகே 2,233 ஏக்கர்கள் நிலம் அடையாளம் காணப்பட்டு அந்த நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
    • ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    உடன்குடி:

    விண்வெளி ஆராய்ச்சியில் உச்சத்தை எட்டி வரும் இந்தியா–வின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குலசேகரன்பட்டினம்

    இந்நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது. பல்வேறு கட்டங்களாக நடந்த ஆய்வுக்குப் பின் தூத்துகுடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டிணம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும்.

    நிலையான காலசூழ்நிலை, நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.

    அந்த வகையில் நிலவியல் ரீதியாக குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இதனையடுத்த இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் முதற்கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அதன்படி குலசேகரன்பட்டினம் அருகே 2,233 ஏக்கர்கள் நிலம் அடையாளம் காணப்பட்டு அந்த நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. காலி இடங்களுக்கு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது.

    மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 கிராமங்களியல் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை 8பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கென 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் துணைஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

    இதனையடுத்து ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் படுக்கப்பத்து பகுதி எள்ளுவிளை பகுதியிலிருந்து அமராபுரம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கம்பி வேலிகள் அமைப்பதற்காக கான்கீரிட் அமைத்து கற்கள் நடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து விறு விறுப்பாக நடந்து வரும் இந்த பணியானது ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்றும், தடுப்பு வேலி அமைக்கும் பணி முடிந்ததும் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×