search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஜா கரை கடந்து 5 ஆண்டாகியும் கரை சேராத குட்லாடம்பட்டி அருவி
    X

    கஜா புயலால் சீர்குலைந்த குட்லாடம்பட்டி அருவி.

    'கஜா' கரை கடந்து 5 ஆண்டாகியும் கரை சேராத "குட்லாடம்பட்டி அருவி"

    • குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க அரசு நிதிக்கு காத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • கம்பிகள் உருக்குலைந்து போயின.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி ஊராட்சியில் தாடகநாச்சிபுரத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற மாதங்களில் சுனை நீர் வரும். கோடை காலங்களில் வறண்டும் காணப்படும்.

    1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்ததால் சிறுமலையின் மேல்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டோடி 60 அடி உயரமுள்ள பெரும்பாறையின் கீழ் விழுவதால் குற்றால அருவிபோல் வடிவம் உருவானது. அன்றிலிருந்து இந்த அருவி வெளிஉலகுக்கு தெரிய தொடங்கியது. அதன்பின் இங்கு மழை காலங்களில் தண்ணீர் விழும் நேரங்க ளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மதுரை மாவட்டத்தில் மற்றொரு குற்றாலமாய் உரு வெடுத்தது.

    2001-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அருவிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. அதேபோல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வனத்துறையின் சார்பாக படிகள் கட்டப்பட்டு அருவியின் முன் தளம் மற்றும் பிடி கம்பிகள் அமைக்கப்பட்டு ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டது.

    சுற்றுலா தலமாக்க கோரி அப்போதைய எம்.எல்.ஏ. மாணிக்கம் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்ததை யொட்டி ரூ.6 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதால் வனத்துறை மூலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு, அடிவாரத்தில் இருந்து அருவிக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக் கற்களும், படிக்கட்டு களும் கட்டப்பட்டு அருவி முன்பு தடுப்பு கம்பிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்ப தற்கு இடையே தடுப்புகம்பிகள், ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டன.

    அருவி நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகளுடன் கதவுகள் அமைக்கப்பட்டது. அதன்பின் வனக்குழு மூலம் ரூ.5 குளிப்பதற்கு கட்டணமாக பெறப்பட்டது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின்போது மீண்டும் அருவிக்கு செல்லும் சாலைகள் சீர்குலைந்தும், தண்ணீர் விழும் இடத்தில் தரைத்தளங்கள் பெயர்ந்தும், கம்பிகள் உருக்குலைந்து போயின.

    ஆனால் 5 ஆண்டுகளாகியும் அதை சீரமைக்கும் முயற்சியில் வனத்துறை முன்வர வில்லை. அதனால் தற்போது கற்கள் பெயர்ந்து சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் பாதை எல்லாம் தற்போது தூர்ந்துபோய் செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்து மீண்டும் அடர்வனக் காடாகவே மாறிவிட்டது. மேலும் அருவி நுழைவு வாயில் பகுதியில் பூட்டு போட்டு பூட்டி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதனால் அருவியை காணவரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஓடை நீரில் குளித்து விட்டு செல்கிறார்கள். தற்போது அருவி வறண்டு ஓடையிலும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட காப்பு காட்டுக்குள் நுழைபவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர்.

    மதுரை மாவட்டத்திலேயே இயற்கையின் கொடையாக சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை தண்ணீரில் நோய்களை குணப்படுத் தும் மாமருந்தாகவும் இருந்த அருவி, தற்போது சீர்குலைந்து போய் நிற்பது வேதனைக்குரியதாகும். கோடை, குளிர், மழை என்று இல்லாமல் எல்லா காலங்களிலும் எப்போது சென்றாலும் அந்த பகுதியில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்து செல்வது குளுமையை ஏற்படுத்திவருகிறது. எனவே போர்கால அடிப்படையில் தண்ணீர் அதிகம் இல்லாத காலங்களில் மீண்டும் மராமத்து பணி செய்து தூர்ந்துபோன அருவிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், 5 ஆண்டுகளாகியும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக அருவி தூர்ந்து போய்விட்டது. சுற்றுலா பயணிகள் இன்றளவும் வந்து ஏமாந்து செல்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இயற்கையின் கொடை யாக உள்ள அருவியின் பயனை அனுபவிக்க முடியாமல் காட்சி பொருளாக்கி விட்டார்கள். தற்போது கோடைகாலத்தை பயன்படுத்தி இனியாவது அருவியை சீரமைக்கும் பணியை தொடங்க வனத்துறை முன்வரவேண்டும் என்றனர்.

    ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிர வன் கூறுகையில், வனத்துறையினர் கட்டுப் பாட்டில் குட்லாடம்பட்டி அருகி உள்ளது. மராமத்து பணி செய்ய போதிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் பணி தொடராமல் இருந்து வருகிறது. ஒருமுறை மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்தனர். தமிழக அரசு ஏழைகளின் குற்றால மான இந்த அருவிக்கு கருணை கொண்டு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

    வனத்துறை அதிகாரி கூறுகையில், இந்த அருவியை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் ஆர்வமாக இருக்கி றார். அதனால் மராமத்து பார்ப்பதற்கான திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி ஒதுக்கீடு வந்ததவுடன் பணி முழுவீச்சில் தொடங்கி ஒரே கட்டத்தில் முடிக்கப்பட்டு விடும் என்றார்.

    Next Story
    ×