search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
    X

    கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காமராஜர் அரங்கில் ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய துணை செயலர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலர் பீக்கிலிபட்டி முருகேசன் வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    தி.மு.க. சமூகத்துக்கான அடிப்படை கருத்துக்களை தாங்கி நிற்கக் கூடிய இயக்கமாகவும் அந்த இயக்கத்தின் கருத்துக்களை மேம்படுத்தக் கூடிய கட்சியாக இயங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் இந்த சமூகத்தில் சமமான ஓர் இடம் உண்டு. அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சமமாக கிடைக்க வேண்டும். இதற்கு எதிரே இருக்கக் கூடிய அனைத்தையும் கேள்வி கேட்பது தான் தி.மு.க. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய உலகத்தை, நாட்டை உருவாக்க வேண்டும். இது தி.மு.க.கொள்கை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை.

    இதற்கு நேர் எதிராக இருக்கக் கூடிய கொள்கை பா.ஜ.க.வின் கொள்கை. திராவிட இயக்கத்திற்கு எதிர் கருத்துக்களை கொண்டுள்ளது தான் பா.ஜ.க. திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறோம் என சொல்லக்கூடிய அ.தி.மு.க., சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் உள்ள ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என கூறுகிறது.

    இப்படிப்பட்ட மோசமான நிலையில் அ.தி.மு.க. தன்னை வைத்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.தமிழகத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் உள்ள மக்கள் மத நம்பிக்கை உள்ள வர்களாக இருப்பார்கள். எது நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படும், எது எதிராக கொண்டு போய் சேர்க்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளவர்கள். அதனால் பா.ஜ.க. கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.

    தி.மு.க. ஆட்சி அமைந்த பின், பெண்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்களுக்கு புதுமை திட்டம், மகளிருக்கு நகர பேருந்தில் இலவச பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    இந்த திட்டங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களை வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்குகளாக மாற்ற வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை முழுமையாக வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராமர், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் சண்முகராஜ் (விவசாய தொழிலாளரணி), ரமேஷ் (பொறியாளரணி), சந்தானம் (விவசாய அணி), மத்திய ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பிரேமா துரைமுருகன், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×