search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியை கடத்தி தாக்குதல்
    X

    அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியை கடத்தி தாக்குதல்

    • அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி கடத்தி தாக்கப்பட்டார்
    • காரில் மர்மநபர்கள் துாக்கி சென்றனர்.

    கரூர்:

    கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி. விங்க் (தகவல் தொழில்நுட்ப அணி) இணை செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு, 8.00 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிவராஜை சராமரியாக தாக்கி குண்டுக்கட்டாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.இதுபற்றிய தகவலறிந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சக்திவேல், சேரன் பழனிசாமி, சுரேஷ், தினேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, பாசறை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் கரூர், கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் முனியப்பன் கோவில் அருகே கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடத்தப்பட்ட நபர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். கடத்திய நபர்கள் அவரை வேறொரு இடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் சிவராஜை, ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் மறியலில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க.வினர் அங்கு விரைந்து சென்றனர்.தன்னை தி.மு.க.வினர் கடத்தி சென்று, சரமாரியாக தாக்கியதாக சிவராஜ் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் கடத்திய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.போலீசார் பேசிக்கொண்டு இருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. பிறகு ஏ.டி.எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. தேவராஜ் உள்ளிட்ட போலீசார் சிவராஜை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கரூர்-ஈரோடு, கரூர்-கோவை சாலைகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுயைமான குளிரில் பலர் பாதிக்கப்பட்டனர். கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் தேர்தல் முடிந்த பின்னர் அவரை விடுவித்தனர். அவரும் தன்னை தி.மு.க.வினர் கடத்திச் சென்றதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியை கடத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




    Next Story
    ×