search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் மோதலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா-காங்கிரஸ் நிர்வாகிகள் 13 பேர் கைது
    X

    நாகரில் மோதலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா-காங்கிரஸ் நிர்வாகிகள் 13 பேர் கைது

    • 40 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • ஆர்ப்பாட்டம், மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்ற செயலாக்கம் உத்தரவிட்டது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம், மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இளைஞர் காங்கிரசார் செட்டிக்குளம் நோக்கி கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பாரதிய ஜனதா அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது பாரதிய ஜனதா, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. கற்கள் மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியதில் காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன் ஆகியோர் காயமடைந்தனர். பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஜெகநாதன், ஆறுமுகம், கிருஷ்ணன், மாதவன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் அலுவலகத்திற்கு முன்பு குவிந்தனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொதுச்செயலாளர் ஜெகநாதன் மற்றும் மகாதேவன் பிள்ளை, மகாராஜன், மாதவன், கிருஷ்ணன், ஆறுமுகம் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 323, 324, 435, 506(2) ஐ.பி.சி. ஆகிய பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரிலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் டைட்டஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், விமல், ஜோண் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், ஜெஸ்லின் உள்பட 11 பேரையும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மகாராஜன், சொக்கலிங்கம் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகாராஜன் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ஆவார். தற்போது தென்காசி மாவட்ட பார்வையாளராக உள்ளார். தலைமறைவான மற்றவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரஸ்-பாரதிய ஜனதா நிர்வாகிகள் மோதலை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×