என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர்-நாகர்கோவில் பஸ்சில் ரூ.10 ஆயிரத்தை தவற விட்ட பெண் - போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்
- நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது.
- கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை
நாகர்கோவில் :
திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது. உடனே கண்டக்டர் அந்த பர்சை போக்குவரத்து கழக அதிகாரியிடம் ஒப்படைத்தார். பின்னர் அதிகாரிகள் அந்த பர்சை வைத்திருந்தனர்.
அந்த பர்சிற்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை. இந்த நிலையில் பர்சை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பர்சில் இருந்த கார்டை ஸ்கேன் செய்து பார்த்தபோது அது வள்ளியூர் அருகே ஆனைகுளம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா ஜெயக்கொடி என்பவரது பர்ஸ் என தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது சரண்யா ஜெயக்கொடி தனது பர்சை தவற விட்டு விட்டு பல இடங்களில் தேடி வருவதாக கூறினார். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவரை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அவரிடம் பர்சிற்கான அடையாளங்களை கேட்டு அறிந்தனர்.
பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு பர்சை சுகன்யா ஜெயக்கொடியிடம் போக்குவரத்து கழக அதிகாரி ஜெரோலின் ஒப்படைத்தார்.பர்சை பெற்றுக் கொண்ட சரண்யா ஜெயக்கொடி போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். சரண்யா ஜெயக்கொடி கூறுகையில் கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்தேன். தற்பொழுது அதிகாரிகள் இந்த பணத்தை எடுத்து என்னிடம் ஒப்படைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.






