என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தக்கலையில் மகன், கணவரை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்
- போலீசார், உறவினர்கள் சமரசத்தை ஏற்க மறுப்பு
- கோர்ட்டில் மனு செய்து விவாகரத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் மணவிளை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.
கணவர் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி, செல்போனில் தோழிகளுடனும், தோழர்களுடனும் பேசி வந்தார்.
இதில் அவரது வீடு அருகே வசித்த 30 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்தார். பின்னர் இருவரும் தனியாக சந்திக்க தொடங்கினர்.
நாளடைவில் இந்த சந்திப்பு கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அவர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். இங்கு வந்த பின்பு மனைவியை கண்டித்தார்.
மேலும் இனி கேரளாவுக்கு வேலைக்கு செல்லவில்லை. இங்கேயே வேலை செய்யப்போவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். கணவர் வீட்டில் இருந்தால் கள்ளக்காதலனை பார்க்க முடியாது என்பதை அறிந்து வேதனை அடைந்த அவர் கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.
இதுபற்றி பெண்ணின் கணவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான பெண்ணை தேடி வந்தனர். இதில் அவர் தனது பக்கத்து வீட்டில் வசித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரியவந்தது. அவரை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். போலீசார், பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீஸ் நிலையம் வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.
இதுபோல போலீசாரும், உறவினர்களும் கணவருடன் செல்லுமாறு பெண்ணுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து கள்ளக்காதலனுடன் செல்வேன் எனக்கூறினார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கினர். பின்னர் கோர்ட்டில் மனு செய்து விவாகரத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். கணவர், மகனை தவிக்க விட்டு பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






