search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் நேருவிடம் குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மனு
    X

    அமைச்சர் நேருவிடம் குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மனு

    • ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மனு
    • 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 51 பேரூராட்சிகளில் 46 பேரூராட்சி தலைவர்கள் சேர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் டெண்டரை ரத்து செய்ய வேண்டும், அமர்வுப்படி உயர்த்தி தர வேண்டும், உள் குடிநீர் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து ரூ.10 லட்சம் வரை தளர்வு தரப்படும் என்றும், பேரூராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி ரூ.10 ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் தருவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததாக பேரூராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சி கூட்டமைப்புகளின் தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜாண் டென்சிங், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, நல்லூர் பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் உட்பட 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×