search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

    • புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கல்லூரிக்கு வருவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது
    • வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் இன்று நீட்டுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நாகர்கோவிலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநில நிர்வாகிகள் தாமரை பாரதி, தில்லை செல்வம், பாபு வினி பிரட், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், மண்டல தலைவர் ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், பிராங்கிளின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் எழுத்தாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வை ஒழிக்க தி.மு.க. போராடி வருகிறது. நீட்டை ஒழிக்கும் நாள் வரலாற்றின் பொன்னாளாகும். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது பாரதிய ஜனதா அரசு தான். அதற்கு துணை நின்றது அ.தி.மு.க. அரசு. தற்போது கவர்னர் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார். ஆனால் தி.மு.க. போராடி வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. கவர்னரின் கூட்டு சதியால் தான் நீட் வந்துள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்கு தனி கோச்சிங் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.

    நுழைவு தேர்வில் கலந்து கொள்வதற்காக குமரியில் உள்ள மாணவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்கு பண செலவு ஆகும். அதற்காக தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். பிளஸ்-2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவிற்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. கல்வியை வளர்ப்பதற்காக காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் கருணாநிதி திருமண உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்பொழுது புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கல்லூரிக்கு வருவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு தகுதியை குறைப்பதற்கான தேர்வாகும். நீட் தேர்வு லஞ்சத்தை ஒழிக்கவில்லை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. டாக்டர்கள் அதிகமான உள்ளார்கள். எனவே பிரதமர் மோடி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போஸ்ட் கார்டில் கையெழுத்திட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

    Next Story
    ×