search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குறைபாடுகள் களையப்படும்
    X

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குறைபாடுகள் களையப்படும்

    • ஆய்வுக்கு பிறகு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுதி
    • மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் குமரி மாவட்டம் வந்தனர்.

    குழுவின் தலைவர் அன்பழகன் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மணக்குடி பகுதியிலும் இந்த குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். இன்று 2-வது நாளாக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குழு தலைவர் அன்பழகன் தலைமையில் உறுப்பினர்கள் காந்தி ராஜன், சந்திரன், சிந்தனை செல்வன், சிவகுமார், சேவூர் ராமச்சந்திரன், தளபதி, நாகை மாலி, பரந்தாமன், பூமிநாதன், ஓ.எஸ்.மணியன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காசநோய் பிரிவிற்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். ரத்த சேமிப்பு கிடங்கையும் சென்று இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு எத்தனை யூனிட் ரத்தம் இருப்பு உள்ளது, மாதம் எவ்வளவு ரத்தம் யூனிட் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கொட்டாரம் அரசு பள்ளியில் ஆய்வு செய்த போது, மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கீழமனக்குடி, மேலமனக்குடி பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கன்னியாகுமரி பகுதியில் தூண்டிவளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு உட்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.17 கோடி செலவில் மாணவ-மாணவிகள் விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதேபோல் நீரோ சிகிச்சை மையம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அந்த குறைபாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த குழுவினரிடம் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மனு ஒன்றை அளித்தார். கன்னியாகுமரி மற்றும் வாவத்துறை பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    Next Story
    ×