என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி சுற்றுச்சுவர், இரும்பு கேட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானை
- கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.
- கடந்த 2 மாத காலமாக இப்பகுதியில் ஒரு காட்டுயானை பகல் மற்றும் இரவு நேரத்தில் உலா வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி உகினியம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.
இதற்கிடையே கடந்த 2 மாத காலமாக இப்பகுதியில் ஒரு காட்டுயானை பகல் மற்றும் இரவு நேரத்தில் உலா வருகிறது. கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராம மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. பொங்கலன்று விவசாய பயிருக்கு காவல் பணியில் இருந்த விவசாய ஒருவரை யானை தாக்கிக்கொண்டது.
இந்நிலையில் மீண்டும் உகினியம் கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானை உகினியம் அரசு நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை 2 இடங்களில் இடித்து சேதப்படுத்தியதோடு பள்ளியில் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
நல்ல வாய்ப்பாக இரவு நேரம் யானை வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் கேட் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-
உகினியம் மலை கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றைக்காட்டு யானை புகுந்து மக்களை அச்சுறுத்தி, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது அரசு பள்ளி பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சுற்றுச்சுவரையும், கேட்டையும் இடித்து சேதப்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் சுற்றி திரியும் காட்டுயானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






