என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
பிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பேர் முதலிடத்தை பிடித்துள்ளனர். சிட்லப்பாக்கம் ரோஸ்லி மெட்ரிக் பள்ளி மாணவி நித்யஸ்ரீ, ஆதம்பாக்கம். எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவன் ஹரி நாராயண் ஆகியோர் 1191 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பிடித்து உள்ளனர்.
பம்மல், ஸ்ரீசங்கரா வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி, பாலவாக்கம் மனுவெல்மோனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீதர்சன் ஆகியோர் 1187 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.
3-வது இடத்தை 1186 மதிப்பெண் பெற்று 2 பேர் பிடித்தனர். மறைமலைநகர் செயிண்ட் ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிஸ்ரீ, காஞ்சிபுரம் ஒரிக்கை விக்டோரியா மேல் நிலைப்பள்ளி மாணவன் பிரவீன் ஆகியோர் பிடித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 354 சமூக விரோதிகள் மீது பாதுகாப்பு நடவடிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 92 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற 334 துப்பாக்கிகளும், 299 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனைத்து வெடிமருந்து கிடங்குகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு அக்கிடங்குகள் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.
இதுவரை வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடை செய்யும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது சம்பந்தமாகவும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கடந்த 11–ந்தேதி முதல் மாவட்டத்தில் 148 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 148 மண்டலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அடிக்கடி சென்று கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் 14 சிறப்பு பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு வாக்குப்பதிவு முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பில் இயங்கி வருவார்கள்.
மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டியும் மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு காவலர்கள், மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகியவற்றை சேர்ந்த 1500 காவலர்களும், 250 ஊர்க்காவல் படையினரும், முன்னாள் ராணுவப் படை வீரர்கள், தீயணைப்புத்துறையினர், காவல்துறையைச் சாராதவர்கள் ஆகியோர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட உள்ளார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய சேமநலப் படைகளிலிருந்து 9 கம்பெனிகள் பாகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவின்போது ஏற்படும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 அதிரடிப் படைகள் நியமக்கப்பட்டுள்ளன.
898 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 2057 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இவற்றுள் 109 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டு அம்மையங்களில் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊட்டியை அடுத்த கூடலூர் வட்டம், ஹைடகொள்ளி காப்பு நிலப்பகுதியில் தாய் யானையால் கைவிடப்பட்ட 6 மாத பெண் குட்டி யானையை வனப் பணியாளர்கள் கண்டனர். இந்த குட்டி யானையை தாயுடன் சேர்ப்பதற்கு 2 நாட்கள் அங்கேயே வைத்து இருந்தனர். ஆனால் தாய், யானை குட்டியை தேடி வராததாலும் குட்டி யானை மிகவும் சோர்வடைந்து விட்டதாலும் கடந்த 11-ந் தேதி முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
யானை குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் உயர் சிகிச்சைக்காக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நேற்று வேன் மூலம் கொண்டு வரப்பட்டது.
பூங்காவில் தற்போது குட்டி யானை உணவு உட்கொள்வதை தவிர்ப்பதாலும் தாய்ப்பால் இல்லாததாலும் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறது. தாய்ப்பாலுக்கு பதிலாக தூய்மையான சுடுநீரில் கலக்கப்பட்ட லேக்டோஜன் மற்றும் குளுக்கோஸ் யானை குட்டிக்கு வழங்கப்படுகிறது.
மேலும் இளநீரும் வழங்கப்படுகிறது. குட்டி யானையின் பயண களைப்பு குறைந்து உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டவுடன் உயர் சிகிச்சைக்கான நடவடிக்கை தொடங்கப்படும்.
புதியதாக வந்த யானைக்குட்டியை பூங்காவில் உள்ள மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள குப்பை தொட்டியில் குவியல், குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குப்பை தொட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் கிடந்தன. மேலும் லட்டர்பேடுகள், வாக்காளர் பட்டியல், பூத் சிலிப்புகள் குவியலாக இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகள் அனைத்தும் காஞ்சீபுரம், உத்திரமேரூர் தொகுதிக்குப்பட்ட வாக்காளர்களுக்கு உள்ளவை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
வாக்காளர் அட்டைகளை வீசி சென்றது யார்? அவர்களுக்கு இவ்வளவு வாக்காளர் அட்டைகள் கிடைத்தது எப்படி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அறிந்ததும் உதவி கலெக்டர் அருண் தம்புராஜ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, வாக்காளர் அட்டைகளை வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஓட்டு போடலாம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கஜலட்சுமி கூறும்போது, குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது பழைய வாக்காளர் அட்டைகள் ஆகும்.
பழைய வாக்காளர் அட்டையாக இருந்தாலும் அதனை குப்பையில் வீசியது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குப்பைத் தொட்டியில் வாக்காளர் அட்டை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர் ராஜா. இவரது அண்ணன் வாசுரெட்டியார் (வயது82). இவர் பழைய தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார்.
நேற்று காலை அவர் முடிச்சூர் சாலை குளக்கரை அருகே ரோட்டை கடக்க தடுப்பு சுவர் ஓரமாக நடந்து சென்றார். அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற சிவசந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் வாசுரெட்டியார் மீது மோதினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த வாசுரெட்டி யாரை மீட்டு சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவசந்திரனை கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி த.மா.கா. அணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.வீரக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் கேப்டன் தலைமையிலான மெகா கூட்டணி உருவாகியுள்ளது.
இந்த கூட்டணி உருவானபோது 3-வது அணி என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது முதல் அணியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் அணியும் இதுதான்.
தொடர்ந்து வெளியாகும் கருத்துக்கணிப்புகளை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல்படி நமது கூட்டணி 130 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுமார் 700 தொழிற்சாலைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. நமது கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
எனவே தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் மா.வீரக்குமாருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்துள்ள நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 3.20 ஏக்கரில் குளம் உள்ளது. இதற்கு அருகே கல்பாக்கம் அணுசக்தித் துறை சார்பில் 16 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்துக்கு, நெய்குப்பி கிராம பஞ்சாயத்து இதுவரை தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. இந்த நிலையில், 3.20 ஏக்கரில் அமைந்துள்ள குளத்தை ஆக்கிரமித்து அதற்கு அருகே மற்றொரு 16 அடுக்கு கட்டிடத்தை கட்டுவதற்கு அணுசக்தித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, எங்கள் ஊர் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட தடை விதிக்கவேண்டும். இந்த நீர்நிலையை பாதுகாக்க காஞ்சீபுரம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து, ‘நீர்நிலையை அணுசக்தித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்போவதாக மனுதாரர் கூறியுள்ளார். எனவே, தற்போதைய நிலையே அங்கு தொடர வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற உத்தரவினால், சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டிடம் பணி மேற்கொள்ள தடை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமிதேவி (38) என்ற பெண் சுற்றுலா விசாவில் குவைத்து சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.
இன்று அதிகாலை விமானத்தில் வந்த அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது லட்சுமிதேவி தனது உள்ளாடை மற்றும் கைப்பையினுள் 25 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். இதனை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து லட்சுமிதேவியை கைது செய்தனர்.
100 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும். தங்க கடத்தலில் பிடிபட்ட லட்சுமிதேவி குருவியாக செயல்பட்டாரா? அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.






