என் மலர்
காஞ்சிபுரம்
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 25-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரசார் குவிந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.
இதில் முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதாரணி, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, பீட்டர் அல்போன்ஸ், செல்வபெருந்தகை, பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜீவ் நினைவு நாள் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காங்கிரசார் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழியை இளங்கோவன் படிக்க காங்கிரசார் திரும்ப சொல்லி உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் ஏற 106 பயணிகள் தயாராக இருந்தனர்.
அப்போது விமான ஊழியர்கள் சிலர் பணிக்கு வராததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பயணிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் 26 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் வந்தவுடன் காலை 11.45 மணியளவில் 86 பயணிகளுடன் திருவனந்தபுரத்துக்கு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பயணிகளின் வாக்குவாதத்தால் சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தை அடுத்த பாலம் அருகே சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கிண்டி நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை பல்லாவரம் தொகுதியில் திமுக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. திமுக சார்பில் வேட்பாளராக கருணாநிதி என்பவரும், அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கடும் போட்டியின் முடிவில் சி.ஆர்.சரஸ்வதி 90,726 வாக்குகள் பெற்று 22 ஆயிரத்து 165 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் கருணாநிதி 1,12,891 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவர்களுக்கு அடுத்தபடியாக மதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வீரலட்சுமி 14,083 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பா.ஜ.க வேட்பாளருக்கு 11,781 வாக்குகள் கிடைத்தன.
தாம்பரத்தை அடுத்த லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சோமநாதன். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு லோகேஷ் (12), நித்தீஷ் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற பின்னர் லோகேசும், நித்தீசும் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டில் அவர்கள் இல்லாததை பார்த்ததும் அவரது பாட்டியும், அருகில் உள்ளவர்களும் தேடினர்.
அருகில் வயல் வெளியில் உள்ள கிணற்று பக்கத்தில் அவர்களது ஆடை இருந்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் குதித்து லோகேஷ், நித்தீஷ் ஆகிய இருவரது பிணத்தையும் மீட்டனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அவர்கள் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. மணிமங்கலம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவான்மியூர்:
பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளூவர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி தேவி (52). இவர்களது மகன் மோகன்.
நேற்று மாலை இவர்கள் 3 பேரும் வீட்டில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் இவர்களது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் துணிகளை காய வைக்க வீட்டு சுவரில் ஆணி அடித்து கொடி கட்டினார். அப்போது மழை நீரில் நனைந்து நன்றாக ஊறி இருந்த சுவர் திடீரென இடிந்தது.
அதைப் பார்த்ததும் அண்ணாமலையும், அவரது மகன் மோகனும் வெளியே ஓடி தப்பினர். ஆனால் தேவி மாட்டிக் கொண்டார். இதனால் அவர் மீது சுவர் விழுந்து அமுக்கியது.
இதனால் பலத்த காயத்துடன் மூச்சு திணறி அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்ததும் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் தக்கல் நகர் சாலிமர் கார்டனில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. நேற்று பெய்த மழையுடன் பலத்த காற்று வீசியது. அதில் அப்பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த 6 வேன்கள் தலைகுப்புற கவிழ்ந்தன.
மேலும் அப்பகுதியில் 11 ஓட்டு வீடுகளின் மேல் கூரைகள் காற்றில் பறந்தன. பெரிய மின் கம்பம் ஒன்று சரிந்தது. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். காற்றில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் கெஜலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் மாமல்லபுரம் கடலோர கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவளம், சூளேரிகாடு, நெம்மேலி, தேவநேரி, கல்பாக்கம், புதுபட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பார்வையிட்டனர். மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறையினர், போலீசார், தீயணைப்பு படையினர்,கடலோரப்பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் கலெக்டர் கெஜலட்சுமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாதுகாப்பும் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டார்.
தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர் படகுடனும், கடலோர பாதுகாப்பு படையினர் 20க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் உத்தரவின் பெயரில் பொக்லைனுடன் பேரூராட்சி ஊழியர்களும் தயார் நிலையில் மாமல்லபுரத்தில் உள்ளனர்.






