என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கவர்னர் கிரண்பேடிக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சென்னையில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்
    ஆலந்தூர்:

    புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில வளர்ச்சிக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்காகவும் நான் மற்றும் 5 அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து நிதி கேட்க உள்ளோம்.

    யோகா நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. யோகா என்பது உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானது. நல்லதை யார் செய்தாலும் வரவேற்போம்.

    மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறார். காங்கிரஸ்தான் தொழில் முறையில் அன்னிய முதலீட்டை ஏற்கனவே கொண்டு வந்தது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கும்போது முதலில் 47 சதவீதமும், பின்பு 60 சதவீதமும் கொண்டு வந்தோம். அப்போது ப.ஜனதா கடுமையாக எதிர்த்தது. இப்போது 100 சதவீதத்தை அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறது. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தை பா.ஜனதா செயல்படுத்துகிறது.

    இதைபோல அணுசக்தி ஒப்பந்தங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் காங்கிரஸ் செயல்படுத்தியது. அப்போது பா.ஜனதா எதிர்த்தது. இப்போது அணுசக்திக்கு வெளிநாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    புதுவை கவர்னருக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கவர்னரும், நாங்களும் இணைந்து செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சிபுரத்தில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் போலீசார் காவலான் கேட் மற்றும் ரயில்வே ரோடு பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது உறியடி, இது நம் ஆளு, உள்ளிட்ட 761 புதுப்பட சிடிக்கள் கைப்பற்றினர். இதனையடுத்து புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்த திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், தாயார் குளம் வைத்தியநாதன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மாமல்லபுரம் அருகே மணல் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்தனர்
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை பக்கிங்காம் கால்வாய் அருகே சவுடு மணல் கடத்தப்படுவதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து டிரைவர் இளங்கோவை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மணப்பாக்கத்தில் சொகுசு கார்கள் திருடிய வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் ரிவர்வியூ காலனி-டாக்டர் அம்பேத்கர் நகர் லிங்க சாலையில் தனியார் கார் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த கிடங்கில் வேளச்சேரியை சேர்ந்த மனோகரன் (வயது 54) காவலாளியாக இருந்தார்.

    கடந்த 9-ந் தேதி அதிகாலை 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை தாக்கி கட்டிப்போட்டு 7 புதிய சொகுசு கார்களை எடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் கல்யாண் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர்கள் அருள்சந்தோசமுத்து, அருணாச்சலராஜா அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படையினர் தீவிர சோதனையில் வளசரவாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 புதிய சொகுசு கார்களையும், மதுரவாயல் பகுதியில் இருந்து ஒரு காரும், கோடம்பாக்கத்தில் ஒரு காரும் என 7 கார்களும் மீட்கப்பட்டன. மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடும் டிராவல்ஸ் அதிபர்கள் தலைமறைவாகினர்.

    சொகுசு கார்களுக்கு போலியான எண்கள் ஒட்டி தந்த ராமாபுரத்தை சேர்ந்த விஜயன் (25), அதற்கு உடந்தையாக இருந்ததாக விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24), மற்றொரு மணிகண்டன் (25), குன்றத்தூர் வினோத் (27), ராமாபுரம் ராஜா (25), கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த அருண்குமார் (25), நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (27) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ரமேசை (30) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு கூட்டுச்சாலை பகுதியில் காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த பன்னீர், கஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோன்று மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு பகுதியில் ஆற்றுப்படுகையில் மணல் திருடிய அதே பகுதியைச் சேர்ந்த பாலுவை போலீசார் கைது செய்தனர். மாமல்லபுரம் பகுதியில் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் இளங்கோ மற்றும் கிளீனர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    கல்பாக்கம் அருகே இளம் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் சீக்கினாங் குப்பத்தை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மகள் லாவண்யா (வயது 20).

    கடந்த 16-ந்தேதி கல்பாக்கத்தில் உள்ள தோழியை பார்க்க சென்ற லாவண்யா பின்னர் வீடு திரும்பவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே லாவண்யாவின் தந்தை லட்சுமணன் கூவத்தூர் போலீசில் கடத்தல் புகார் கொடுத்தார்.

    அதில் பனையூர் குப்பத்தை சேர்ந்த வாலிபர் லாவண்யாவை கடத்தி சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளார்.

    செங்கல்பட்டில் போதகரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த திருமணி பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 40) ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று காலை ஆசீர்வாதம் குடிபோதையில் திருமணி கே.கே.நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை கண்டித்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் மற்றும் பிரார்த்தனைக்கு வந்தவர்களை ஆசீர்வாதம் கத்தியை காட்டி மிரட்டினார். மேலும் போதகர் இம்மானுவேல் பிரகாசிடம் மாமூல் கேட்டு எச்சரித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்தவர்கள் ரவுடி ஆசீர்வாதத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கட்டி வைத்து கற்கலால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த ஆசீர்வாதம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து போதகர் இம்மானுவேல் பிரகாஷ், அவரது மகன் மனோபால் பிரகாஷ், இம்மானுவேல் பிரகாசின் தம்பி ஜோயல் பிரகாஷ், கருணாகரன், லோகிதாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைதான போதகர் இம்மானுவேல் பிரகாஷ் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு அருகே ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் அருகே உள்ள குப்பம் ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. லுங்கியும், டி-சர்ட்டும் அணிந்து இருந்தார். முன்விரோதத்தில் அவரை யாரேனும் கடத்தி வந்து கொன்று ஏரியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டில் இன்று காலை போதகரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த திருமணி பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் என்கிற ஆசீர்வாதம். ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. லாரியை மறித்து டிரைவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசீர்வாதம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்திருந்தார்.

    இன்று காலை ஆசீர்வாதம் குடிபோதையில் திருமணி கே.கே.நகர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அங்கு போதகர் பிரகாஷ் என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய தேவாலயத்தை நடத்தி பிரார்த்தனை செய்து வருகிறார்.

    இன்று காலை பிரார்த்தனைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது போதையில் இருந்த ரவுடி ஆசீர்வாதம் தேவாலயத்துக்குள் கத்தியுடன் புகுந்தார். போதகர் பிரகாஷை கத்தியை காட்டி, தனக்கு தினமும் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டினான்.

    இதை பார்த்த பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசீர்வாதத்தை வெளியே செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர் தொடர்ந்து போதகரை மிரட்டியபடியே இருந்தார்.

    உடனே அவரை அங்குள்ளவர்கள் பிடித்தனர். அவர்கள் மீது கத்தியை வீசிய ஆசீர்வாதம் தன்னை பிடித்தால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியபடி தேவாலயத்துக்கு வெளியே வந்தார்.

    பயந்து போன பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கற்களை எடுத்து ஆசீர்வாதம் மீது சரமாரியாக வீசி தாக்கினார்கள். இதில் அவரது தலை, மார்பு பகுதிகளில் கற்கள் பலமாக தாக்கியது. சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ரவுடியை கற்களை வீசி விரட்டும் முயற்சியில் அவர் இறந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆசீர்வாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக போதகர் பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரவுடி கற்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் செங்கல்பட்டில் பரபரப்பு நிலவுகிறது.
    பொத்தேரியில் ரூ.1 கோடி கேட்டு மருத்துவ மாணவர் கடத்தல் வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகத்தை சேர்ந்தவர் கவுதம்கோத்தாரி. இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி. பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 2-ந்தேதி மாலை பொத்தேரி பஸ் நிலையத்தில் பிரகாஷ் கோத்தாரி நின்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். மேலும் அவரது தந்தை கவுதம் கோத்தாரியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர்.

    போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதை அறிந்ததும் மறுநாள் (3-ந்தேதி) அதிகாலை கருங்குழி அருகே மாணவர் பிரகாஷ் கோத்தாரியை இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கவுதம் கோத்தாரியிடம் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி இருந்த சாலவாக்கம் சீத்தனஞ்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜா கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    பிரகாஷ் கோத்தாரியிடம் வாங்கிய பைனான்ஸ் தொகையை கட்ட முடியாததால் அவரது மகனையே கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து ராஜா, வினோத், குமார், குபேந்திரன், அரசு, ஆவடியை சேர்ந்த கிஷோர், பரணிதரன், திவாகர் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை அருகே உள்ள அரசங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (26) கட்டிட சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பானுமதி. கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் அருகே பாலுச் செட்டிசத்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பாலுச் செட்டிசத்திரம் அருகே திருப்புட்குழி பகுதியில் சாலையை கடந்த போது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.

    சம்பவ இடத்திலேயே விஜயகாந்த் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பானுமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர 30–ந் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம் என்று கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்,

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மைப் பள்ளிகள் தவிர்த்து) 2016–17–ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுநிலை வகுப்புகளில் கட்டணமின்றி சேர்க்கை விண்ணப்பங்கள் பெற இந்த மாதம் 30–ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் அந்தந்த தனியார் சுயநிதி பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் போன்ற இடங்களில் கிடைக்கும்.

    இந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சேர்க்கை கோர முடியும். சேர்க்கை கோருபவரின் முகவரியானது பள்ளி இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ–க்குள் இருக்க வேண்டும்.

    6–ம் வகுப்பு சேர்க்கைக்கு பள்ளியானது விண்ணப்பதாரரின் இருப்பிடத்தில் இருந்து 3 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த பள்ளியிலோ, அல்லது மேலே குறிப்பிட்ட அலுவலகங்களிலோ வரும் 30–ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×