என் மலர்
காஞ்சிபுரம்
ஆதம்பாக்கம் எல்.ஐ.சி. நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது வீட்டு முன் பகுதியில் வேப்பமரம் உள்ளது.
நேற்று காலை கடும் வெயில் சுட்டெரித்த நேரத்தில் அந்த வேப்பமரத்தில் இருந்து மட்டும் மழை பெய்தது போல் தண்ணீர் கொட்டியது.
இதனை பார்த்து அதிசயித்த அப்பகுதி மக்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்ததாக கூறி அவர்கள் வழிபட்டனர். மேலும் மரத்திற்கு பூஜை செய்து கற்பூரம் காட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே எல்.ஐ.சி. நகர் பின் பகுதியில் தனியாக கோவில் கட்டியுள்ள திருநங்கைகளும் அங்கு வந்தனர். அவர்கள் வேப்ப மரத்தில் சாமி இருப்பதாக கூறி இங்கு கோவில் கட்ட வேண்டும். வீட்டு முன்புற சுவரை இடிக்க வேண்டும் என்றனர்.
மேலும் மாமல்லபுரத்தில் இருந்து சாமி சிலை ஒன்றையும் கொண்டு வந்து பூஜை செய்ய போவதாகவும் கூறினர். வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்தது பற்றி அறிந்து கூட்டம் கூட்டமாக ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் வந்து சென்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் ஆறுமுகம் வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் டாக்டர் ஒருவரது வீட்டு மாடியில் இருந்த குடிநீர் பைப் உடைந்து வேப்ப மரத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது நீண்ட நேரத்திற்கு பின்னர் தெரிந்தது. இதனை அறிந்து அங்கு திரண்டு இருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இச்சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் ஆதம்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறும்போது, பொது மக்கள் சிலரின் அறியாமையால் இச்சம்பவம் நடந்துள்ளது. குடிநீர் குழாய் உடைந்திருப்பது தெரியாமல் வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்ததாக பரபரப்பை கிளப்பியுள்ளனர். நல்ல வேளையாக உடனடியாக இது தெரிந்ததால் அந்த மரமும், வீடும் தப்பியது. இல்லையெனில் அங்கேயே கோவில் கட்டி இருப்பார்கள் என்றனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (24) கூலி தொழிலாளி.
கடந்த சில நாட்களாக இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதில் மனமுடைந்த கிருஷ்ணன் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க டாக்டர்கள் பரிந்துரை செய்து 1.30 மணி அளவில் அனுமதி சீட்டு அளித்தனர். செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ணனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே ஒரு நோயாளியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் வேறு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதனால் உயிருக்கு போராடிய கிருஷ்ணனை பார்த்து உறவினர்கள் தவித்தனர்.
இதற்கிடையே செங்கல்பட்டுக்கு சென்ற ஆம்புலன்ஸ் சுமார் 4 மணி நேரம் தாமதமாக 5-50 மணிக்கு காஞ்சீபுரத்துக்கு திரும்பி வந்தது.
பின்னர் கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அவர் நலமாக உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 46 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையினில் இவற்றில் 15 ஆம்புலன்சுகள் செயல்பட்டு வருகின்றன.
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சென்னை அல்லது செங்கல்பட்டு கொண்டு செல்ல பொது நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பிரிவிற்காக இரண்டு ஆம்புலன்சுகள் உள்ளன.
காஞ்சீபுரத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிக்கடி விபத்தில் சிக்குபவர்கள் சிகிச்சை பெற கூடுதல் ஆம்புலன்சுகளை இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, சென்னை அல்லது செங்கல்பட்டு அஸ்பத்திரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்ல காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆம்புலன்ஸ்கள் இல்லை.
செங்கல்பட்டு செல்லும் ஆம்புலன்ஸ் திரும்பி வரும் வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
சின்ன காஞ்சீபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். வக்கீல். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாசுதேவனை மர்ம கும்பல் வெட்டியது. இதில் கையில் பலத்த காயம் அடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காஞ்சீபுரம் பாலிமேடு பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் சரவணன், அவரது சகோதரர் செந்தில்குமார், ரகுவரதன், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. கைதான சரவணன் என்பவர் தே.மு.தி.க. தலைமைக் கழக பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில்நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (34) ரவுடி. இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கஞ்சா உள்பட பல வழக்குகள் கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கஞ்சா விற்ற வழக்கில் சிவக்குமாரை போலீசார் கைது செய்து கண்ணகிநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணை நடத்தினர். பின்னர் மதிய உணவு வாங்கி கொடுத்தனர். மாலை 5 மணி அளவில் சிவக்குமார் தனக்கு பசிப்பதாக கூறினார். அப்போது கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள் மட்டுமே பணியில, இருந்தனர். அதில் ஒருவர் உணவு வாங்க வெளியே சென்று விட்டார் இதை பயன்படுத்தி சிவக்குமார் தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்போரூர்:
விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அஜ்முகம்மது, அஜீஸ் உள்பட 9 பேர் காரில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர். உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு வழி அனுப்ப வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திருப்போரூர் ரவுண்டானா அருகே ஒரு வளைவில் திரும்பும் போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. அதிலிருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறிதுடித்தனர்.
இதில் அஜிஸ் (17) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காருக்குள் சிக்கி இருந்த அஜீஸ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். வேகமாக காரை ஓட்டி வந்த டிரைவர் வளைவை கவனிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது கார் மோதியது தெரியவந்தது. இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மாமல்லபுரம்:
காசிமேடு, ஆரம்பாக்கம், பொன்னேரி, மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஆழ்கடலில் மட்டுமே சுறா வகையை சேர்ந்த சூற மீன்கள் சிக்கும்.
இந்த நிலையில் மாமல்லபுரம் கடல் பகுதியில் மீனவர்களின் வலைகளில் அதிகளவில் சூற வகை மீன்கள் கடந்த 2 நாட்களாக சிக்கி வருகிறது.
சூற மீன்கள் இங்கு அதிகமாக பிடிபடுவது இதுவே முதல் முறை ஆகும். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூற மீன்களை 1 கிலோ 80 ரூபாய்க்கு சென்னை, பெங்களூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள் அங்கு சுறாபுட்டு, வருத்தமீன், மீன்கறி போன்ற உணவுகளுக்காக அதிகளவில் இந்த வகை மீன்கள் பயன்படுத்தப்படுகிறது. சூற மீன் நகரங்களில் கிலோ 400 வரை விற்பணையாகிறது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணு உலை கொதிகலன் குளிர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நீர் மீண்டும் கடலில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கதிரியக்கம் மற்றும் உயர் வெப்ப அழுத்தம் ஏற்பட்டு ஆழ்கடல் மீன்கள் கல்பாக்கம் பகுதியில் கிடைக்காது என்று கூறப்பட்டு வந்தது.
இதனை அணுமின் அறிவியலாளர்கள் மறுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகிலேயே ஆழ்கடலில் சூற மீன்கள் பிடிபட்டுள்ளதால் அணுமின் நிலைய அறிவியலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பம்மல் நல்லதம்பி ரோட்டில் வசிக்கும் முருகன் என்பவர் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்த போது வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் அவர் அலறியடித்து வெளியே ஒடி வந்து பீதியுடன் காணப்பட்டார். ஆனால் அந்த தெருவில் உள்ள மற்றவர்களுக்கு நிலநடுக்க பீதி தெரியவில்லை.
இதேபோல் பம்மல் டி.எல்.ரகுபதி காலனியை சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர் பிரவின் தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென கட்டில் ஆடியதால் அலறியடித்து எழுந்தார். நிலநடுக்கம் போல் தெரிந்ததால் பொழிச்சலூர் கல்யாண் நகரில் உள்ள தனது நண்பர் லோகேசை போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தார்.
இந்த பரபரப்பு பீதி நள்ளிரவு பம்மல் பகுதியில் வேகமாக பரவியதால் போலீசாரும் உஷாராக ஆங்காங்கே ரோந்து சென்றனர்.
ஆனால் இந்த நிலநடுக்கத்தை பல்லாவரம், பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில் பெரும்பாலானோர் உணரவில்லை. வானிலை மையத்திலும் நிலநடுக்கம் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி சார்பில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்கிறேன். தமிழக காங்கிரசில் புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது பற்றி சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ஆகியோர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விரைவில் புதிய தலைவரை சோனியாகாந்தி அறிவிப்பார். தலைவராக யாரை அறிவித்தாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. அதை பலப்படுத்தி வலிமையான கட்சியாக மாற்றுவோம்.
எனக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தரக்கூடாது என சோனியாகாந்திக்கு 39 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட மனு அளித்து இருப்பதாக தகவல்கள் வந்தன. அந்த மனுவில் உள்ள கையெழுத்துகள் போலியானது.
முதல் பக்கத்தில் உள்ள 3 கையெழுத்து மட்டுமே உண்மையானது. மற்றவைகள் அனைத்தும் போலியானது. பல்வேறு விவகாரத்தில் வாங்கிய கையெழுத்தை இதில் இணைத்து இருப்பதாக மாவட்ட தலைவர்கள் மறுத்து கூறுகின்றனர்.
என் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. அ.தி.மு.க., மற்றும் பா.ஜனதா கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தார் என்று மட்டும்தான் கூறமுடியும்.
கட்சி மாறி பதவிகளை பெறுவது சகஜம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இளங்கோவன் எனக்கு நெருங்கிய நண்பர். இப்போதும் அவர் எனக்கு நண்பர் தான். அதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும், “சட்டசபை தேர்தலில் பலருக்கு சீட் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் இளங்கோவன் மோசடி செய்தாகவும், அதனால் தான் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறதே” என்று நிருபர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் “இதுபோன்று தவறான பிரசாரம் செய்து ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்துவது சரியல்ல. எந்தவித ஆதராமும் இல்லாமல் எங்களில் ஒருவர் மீது குற்றம்சாட்டுவதை நான் ஏற்கமாட்டேன்” என்று கூறினார்.
குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களது மகன் கோவர்தன். மகள் ஸ்ரீநிதி. அங்குள்ள தனியார் பள்ளியில் கோவர்தன் 4-ம் வகுப்பும், ஸ்ரீநிதி 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை மாணவன் கோவர்தன் கீழே விழுந்ததில் கை வீங்கி உள்ளது என்று பள்ளியில் இருந்து சுதாகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே மகனை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதனையில் கோவர்தனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது தெரிந்தது.
இதுபற்றி மாணவனிடம் கேட்டபோது, பள்ளி விளையாட்டு ஆசிரியர் மணிகண்டன் கீழே தள்ளி விட்டதால் கைமுறிவு ஏற்பட்டதாகவும், யாரிடமும் இதுபற்றி சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்தான்.
இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் சுதாகர் புகார் செய்தார். அதன்பின் சிட்லபாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், ஆசிரியர் மணிகண்டன் தாக்கியதில் தனது மகன் கோவர்தன் கையில் முறிவு ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்ல சென்னை விமானநிலையம் வந்தார். அவ்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
வெகு விரைவில் தகுதியான ஒருவரை தலைவராக நியமிப்பார்கள். அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
காஷ்மீர் பிரச்சினை தற்போது முன்பை விட அதிக அளவு இருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினை அப்போதைய மத்திய அரசின் நடவடிக்கையால் கட்டுக்குள் இருந்தது.
தற்போது காஷ்மீரில் தினம்தினம் வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்பு, பயங்கரவாத தாக்குதல், உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம் பா.ஜனதா அரசுதான். பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.
ஒரு பக்கம் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மற்றொரு பக்கம் தீவிரவாதத்தை அடக்குவேன் என்று பேசி வருகிறார். காஷ்மீர் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவே தான் பயங்கரவாத தாக்குதல், குண்டுவெடிப்புகள் வன்முறைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு டவுன், பழைய ஜி.எஸ்.டி. சாலை குண்டூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கிருந்து செங்கல்பட்டு, திம்மாவரம், மையம், ஆத்தூர், மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே தரையில் புதைக்கப்பட்டு இருந்த கேபிள் வயரை சுமார் 50மீட்டர் தூரத்துக்கு வெட்டி எடுத்து திருடி சென்று விட்டனர். இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுமார் 1500 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. டெலிபோன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர்.
டெலிபோன் வயரில் உள்ள காப்பர் கம்பிக்காக இந்த திருட்டு நடந்து இருப்பதாக தெரிகிறது. திருடப்பட்ட வயரின் மதிப்பு சுமார் ரூ. 1லட்சம் இருக்கும்.
இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி செங்கல்பட்டு தாலுக்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தை அடுத்த காட்டுப்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி (55) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களது மகள் இந்துமதி (27), மகன் காமேஷ் (24).
இவர்களில் இந்துமதி சுங்குவார் சத்திரத்தை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். காமேஷ் என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.
நேற்று மதியம் முத்துமாரி குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களது பேச்சு எதுவும் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை.
சந்தேகம் அடைந்த அவர்கள் முத்துமாரி வீட்டுக்குள் சென்று பார்த்த போது, முத்து மாரி, சரஸ்வதி, இந்துமதி, காமேஷ் ஆகிய 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. அருகே வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது.
காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்திய போது ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்தது குறித்து உருக்கமான தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய இந்துமதிக்கு பெற்றோர் காஞ்சீபுரம் அருகே உள்ள நீர்வள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் பேசி முடிவு செய்து இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் இந்துமதியை பெண் பார்த்து பிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இந்துமதி திருமணம் வேண்டாம் என்று மறுத்தார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை மாப்பிள்ளை வீட்டிற்கு முத்து மாரி குடும்பத்துடன் சென்று மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்ய இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து இந்துமதி தகராறில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் அவரை கண்டித்தனர்.
இதில் மனவேதனை அடைந்த இந்துமதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து மாரி, சரஸ்வதி, காமேஷ் ஆகியோரும் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
4 பேர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இந்துமதி வேலை பார்த்த இடத்தில் யாருடனும் நெருங்கி பழகினாரா? என்றும் விசாரணை நடக்கிறது. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம்அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






