என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பெருங்களத்தூரில் வீட்டில் பரிகாரபூஜை செய்வதாக கூறி நகைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    தாம்பரம்:

    பழைய பெருங்களத்தூர், சிவசண்முகம் சாலையில் வசித்து வருபவர் சிவனேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காளீஸ்வரி.

    இன்று காலை அவர்களது வீட்டிற்கு 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது சிவனேசனிடம் ‘‘உங்கள் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளது. பரிகாரபூஜை செய்தால் சரியாகி விடும்’’ என்றனர்.

    இதனை நம்பிய சிவனேசன் பரிகார பூஜை செய்ய சம்மதித்தார். பூஜை செய்து கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் தங்க நகையை துணியில் கட்டி வைக்க கூறினர்.

    இதையடுத்து காளீஸ்வரி 3 பவுன் நகையை துணியில் கட்டி சாமி படம் முன்பு வைத்தார். பூஜை முடிந்ததும் 2 வாலிபர்களும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

    இதற்கிடையே சந்தேகம் அடைந்த காளீஸ்வரி நகை இருந்த துணியை பிரித்து பார்த்த போது எதுவும் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் கணவரிடம் தெரிவித்தார். பூஜை செய்வதாக ஏமாற்றி 2 வாலிபர்களும் நகையை திருடி செல்வது தெரிந்தது.

    இதுபற்றி தெரிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் 2 வாலிபர்களையும் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை பீர்க்கன்கரணை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க.-காங்கிரசும் தான் காரணம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனைக்காக தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு இந்த பேராட்டத்தை முன் நிறுத்தி உள்ளது.

    அதே போல் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி தமிழகத்துக்கு செய்த துரோகத்தை மறைக்க கூடிய வகையில் போராட்டத்தை நடத்தி இருக்கிறது.

    இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் இன்று யாரை வைத்து போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்? இந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கும் போது விவசாயிகள் வயிற்றில் அடித்தது. இவர்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.

    காவிரி பிரச்சனைக்கு தி.மு.க.- காங்கிரசும்தான் காரணம். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தி.மு.க. காவிரி பிரச்சனையில் ஏன் அவர்களுக்கு சாதகமாக சென்றது? வாஜ்பாய் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு எல்லா முயற்சிகளும் மேற்கொண்டார்.

    அப்போது தமிழ்நாட்டில் இருந்து ராகுல்காந்தி ஒரு பேட்டி அளித்தார். அவராலேயே அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இன்று நதிநீர் இணைப்பு திட்டம் வந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகள் நமக்கு வந்து இருக்காது.

    காங்கிரஸ் மற்றும் தி.மு.க. செய்த தவறுகளை சரி செய்வதற்கு கால அவகாசம் மத்திய அரசுக்கு தேவைப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால்தான் மேலாண்மை குழு போன்ற வி‌ஷயங்களை நிதானமாக கடைபிடிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது.

    கண்டிப்பாக பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வேண்டிய தண்ணீரை தொடர்ந்து பெற்று தருவார்.

    மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடிய செயல்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவார். தி.மு.க., காங்கிரசின் போராட்டம் விவசாயிகளை ஏமாற்றும் செயல்.

    இவர்கள் காவிரி பிரச்சனை பற்றி பேச அருகதையற்றவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக தடகள வீராங்கனை சாந்தி தனக்கு பதக்கம் வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது பற்றி பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, திறன் உள்ளவர்கள், தகுதி உள்ளவர்களுக்கு மத்திய அரசு கண்டிப்பாக உதவும்.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் 2-வது நாளாக ரெயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடி யாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்றும், இன்றும் (18-ந் தேதி) ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன.

    இதற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையத்தில் இன்று காலை காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் பொன்மொழி, சுகுமார், வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், அப்துல் மாலிக், மாவட்ட விவசாயி அணி செயலாளர் சோழனூர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்தனர். மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மறியல் போராட்டத்தையடுத்து காஞ்சீபுரம் புதிய மற்றும் பழைய ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் 3-வது நடை மேடையில் புறப்பட்ட சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், விவசாய அணி துணை அமைப்பாளர் ஆதிசேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன், கூலூர் ராஜேந்திரன் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கி.வேணு தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆவடி ரெயில் நிலையத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நாசர், முன்னாள் எம்.பி. கிருஷ்ண சாமி, ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூவை ஜேம்ஸ், பவுன்குமார், நடுக்குத்தகை தலைவர் ரமேஷ், திருநின்றவூர் நடராஜன், ஆவடி நகர்மன்ற (பொறுப்பு) தலைவர் கலை.மா.சேகர் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரிநதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்ட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் ரெயில் மறியல் செய்தனர். காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்திலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் புதிய ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாநில துணை பொதுச் செயலாளர் தீனன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் திருமால்பூர்- சென்னை கடற்கரை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் மக்கள் நலகூட்டியக்கத்தின் சார்பினில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம்-சென்னை பயணிகள் ரயிலை மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கைதான அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். மறியல் போராட்டத்தையொட்டி, காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன், தொகுதி செயலாளர் தென்னவன், நகர செயலாளர் அன்புச்செல்வன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் கண்ணன், வட்டார தலைவர் ரவி,

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஊனை பார்த்தீபன், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மோகனன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்கள் செங்கல்பட்டு- கடற்கரை மின்சார ரெயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து பாதுகாப் புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் சுமார் ½ மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தனன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் நீலவனத்து நிலவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    அவர்களை திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்தனர். போராட்டத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மதுராந்தகம் அருகே பஞ்சு தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டியில் தனியார் பஞ்சு தயாரிக்கும் கம்பெனி உள்ளது. கார் மற்றும் வானங்களின் இருக்கைகளுக்கு தேவையான பஞ்சுகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

    நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் கம்பெனியை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் பஞ்சு தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள் அறையில் திடீரென தீப்பிடித்தது.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் பரவியது. காற்றின் வேகத்தில் கம்பெனி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி, போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு, மறைமலை நகர், உத்திரமேரூரில் இருந்து 5 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    தீ கொளுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. விடிய, விடிய தீயை அணைக்க போராடினர்.

    இன்று அதிகாலை தீ முழுவதும் அணைக்கப்பட்டது. எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. விற்பனைக்கு தயாராக இருந்த பஞ்சுகளும் கருகின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. கம்பெனியில் தீப்பிடித்த போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என வைகோ தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்துக்கு சோகமும், ஆபத்துகளும் சூழ்ந்து உள்ள காலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இல்லாத ஒரு ஆபத்து காவிரி உரிமை பிரச்சினையில் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரும் தரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உதாசினப்படுத்தி உள்ளது.

    மேகதாதுவில் அணைகட்டும் பணியை தொடங்க போவதாகவும் அறிவித்து உள்ளது. மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு இதை தடுக்காமல் ஓரவஞ்சகமாக செயல்பட்டு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. இதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என திட்டமிட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளதை மன்னிக்க முடியாது. நர்மதா அணையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தபோது பாராளுமன்றத்தில் அனுமதி எதுவும் பெறவில்லை.

    விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், அரசியல் கட்சிகளும் சேர்ந்து மத்திய அரசை கண்டித்து 2 நாள் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தாக, தூண்டுதலாக மத்திய அரசு இருப்பதால் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

    தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை மத்திய அரசுக்கு உணர்த்துகின்ற வகையில் போராட்டங்கள் நடக்கும். சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெல்லி செல்லும் ரெயிலை மறித்து போராட்டம் செய்யப்படும். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக நடத்தப்படும் என்பதால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும்.

    மருத்துவமனையில் உள்ள முதல்-அமைச்சர் பற்றி மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்வது எல்லாம் கருத்து சுதந்திரம் ஆகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாமல்லபுரத்தில் கார்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மணலியை அடுத்த சாத்தாங்காடை சேர்ந்தவர் ஜெய்சர்பாய் (வயது 65). பிராட்வேயில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்து இருந்தார்.

    இன்று காலை அவர் ராயபுரத்தை சேர்ந்த உறவினர் மைசீத் அத்திமுடன் (26) காரில் பாண்டிச்சேரி நோக்கி சென்றார்.

    மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மீது கெய்சர்பாய் சென்ற கார் மோதியது.

    இதில் 2 கார்களும் நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கிய கெய்சர்பாய் சம்பவ இடத்திலேயே பலியானார். மைசீத்பாய் மற்றும் மற்றொரு காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவற்றை மீட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மைசீத்அத்தீம் பரிதாபமாக இறந்தார்.

    மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குவைத் சிறையில் இருந்து விடுதலையான 3 பேரும் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர்.

    ஆலந்தூர்:

    நாகர்கோவில் மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 2015-ம் ஆண்டு குவைத்தை சேர்ந்த நிறுவனத்துக்காக மீன்பிடிக்க சென்றனர். சென்னையை சேர்ந்த ஏஜெண்டு மூலம் அவர்கள் குவைத் சென்றனர்.

    குவைத் சென்றதும் அவர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்த நிறுவனம் வாங்கிக் கொண்டது. அதன்பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.

    இதனால் அவர்கள் வேலையில் இருந்து நின்று விட்டனர். இந்தியா திரும்ப முடிவு செய்த மீனவர்கள் குவைத் நிறுவனத்தினரிடம் தங்களின் பாஸ்போர்ட்டுகளை கேட்டனர்.

    ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டுக்கு ரூ.1 லட்சம் பணம் தந்தால்தான் திருப்பி தருவோம் என்று கூறி விட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 மீனவர்கள் தலா ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்து பாஸ்போர்ட்டை பெற்று தமிழகம் திரும்பி விட்டனர். மீதமுள்ள 5 பேரும் குவைத்தில் தவித்தனர்.

    பின்னர் அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடினர். அவர்கள் சில மாதம் மட்டும் உணவு வழங்கி பராமரித்தனர். மேலும் இந்தியா செல்ல விமான டிக்கெட்டுக்கு வேண்டுமானால் ஏற்பாடு செய்வதாக தூதரக அதிகாரிகள் கூறினர்.

    ஆனால் குவைத் நிறுவனத்திடம் இருந்து பாஸ்போர்ட்டை அவர்களால் வாங்கி கொடுக்க முடியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி திரிந்த மீனவர்கள் அங்குள்ள போலீசாரின் உதவியை நாடினர்.

    பாஸ்போர்ட் இல்லாத குற்றத்துக்காக அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 1 மாதம் கழித்து 5 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அவர்களில் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் ஜான்சீம்ஸ், சிபின், கேரளாவை சேர்ந்த அனிஷ் ஆகிய 3 பேரும் அங்குள்ள நண்பர்கள் மூலம் உறவினர்களை தொடர்பு கொண்டு பணம் வாங்கி குவைத் நிறுவனத்திடம் இருந்து பாஸ்போர்ட்டை பெற்றனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    குவைத்தில் உள்ள நிறுவனத்தினர் எங்களுக்கு 4 மாதமாக சம்பளம் தர வில்லை. இதனால் நாங்கள் வேலையில் இருந்து நின்று விட்டோம். அதன்பிறகு உணவுக்கு வழியில்லாமல் தவித்தோம். ஆதரவு இன்றி சுற்றித்திரிந்தோம்.

    இந்திய தூதரக அதிகாரிகள் சில மாதங்கள் மட்டுமே எங்களுக்கு உதவி செய்தனர். ஒரு வழியாக உறவினர்களின்உதவியால் தமிழகம் திரும்பி விட்டோம். இன்னும் 2 மீனவர்கள் குவைத்தில் தவிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட தயாராக இருந்த விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செய்த போது எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 152 பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர். விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செய்த போது விமான எந்திரத்தில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதுகுறித்து அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஊழியர்கள் வந்து எந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு உடனடியாக சரி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் 3 மணி நேரம் காத்து கிடந்தனர்.

    இதையடுத்து மாற்று விமானம் 10.30 மணிக்கு அந்தமான் செல்லும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானி சாமர்த்தியமாக எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
    மதுராந்தகம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    சிறுவர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

    இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 15 பேர் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அப்பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்ததால் நோய் தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் சுகாதாரப்பணிகள் நடந்து வருகிறது.

    மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    அபுதாபி, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 விமானத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய பெண் உள்பட 4 பேர் கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    அபுதாபியில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தான் வைத்திருந்த பையை விமான நிலையத்தில் பணிபுரியும் 2 தற்காலிக ஊழியர்களிடம் கொடுத்தார்.

    பின்னர் சோதனை முடிந்து அந்த வாலிபர் வெளியே வந்து தற்காலிக ஊழியர்களிடம் இருந்து பையை வாங்கியதை அதிகாரிகள் பார்த்து மடக்கி பிடித்தனர். பையை சோதனை செய்த போது 1 கிலோ தங்க பிஸ்கட் இருப்பது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.

    அவர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த முகமதுகான் என்பது தெரிந்தது.

    1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் உதவியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் தங்கம் கடத்தலில் உள்ள பின்னணி குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரை சோதனை செய்த போது புடவையில் 200 கிராம் தங்க கட்டியை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த ராஜம்மாள் என்பது தெரிந்தது.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ரமேஷ், கண்ணன் ஆகியோரை சோதனை செய்த போது இருவரும் ஆசன வாயிலில் தலா 200 கிராம் தங்க கட்டியை மறைத்து கடத்தியதை கண்டுபிடித்தனர்.

    3 பேரிடம் இருந்து 600 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். கைதான அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிடாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து தலையிடுமாறு கோரிக்கை வைப்பேன் என்று நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
    ஆலந்தூர்:

    பெங்களூர் சென்ற புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும். அதை கூட முழுமையாக தர வில்லை. கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறது.

    காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால் பிரதமர் மோடியோ நேரம் ஒதுக்குவதற்கு காலம் தாழ்த்தி அ.தி.மு.க. எம்.பி.க்களை உதாசீனம் செய்து இருக்கிறார்.

    காவிரி பிரச்சினையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தபோது பிரதமர் மன்மோகன்சிங் தமிழக, கர்நாடக, புதுச்சேரி முதல்-அமைச்சர்களை கூட்டி தீர்வு கண்டார்.

    ஆனால் தற்போதைய பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய பிரதமர் காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் பா.ஜனதா எம்.பி.க்களின் அழுத்தம்தான் காரணம்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைய மத்திய அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்க கூடாது.

    மத்திய அரசு ஆணையத்தை அமைத்தால் தமிழகம், புதுவைக்கு தண்ணீர் வர இடையூறாக இருக்காது.

    வருகிற 17-ந்தேதி அல்லது 18-ந்தேதி டெல்லி செல்ல இருக்கிறேன். காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிடாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து தலையிடுமாறு கோரிக்கை வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×