என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் காவிரி பிரச்சினைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பழைய கதைகளை பேசி வருகிறார்கள். அதனால் பயன் ஒன்றுமில்லை. தங்களின் தவறுகளை மறைப்பதற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை செய்யாமலேயே வேண்டுமென்றே கர்நாடகாவில் தேர்தல் வரும் நிலையில் இப்படி செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் அனைத்து கட்சியில் இருந்தும் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர்.
வருகின்ற 25-ந்தேதி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் காவிரி பிரச்சினை குறித்து பேச அழைத்து இருக்கிறார். காங்கிரஸ் சார்பாக நான் அதில் கலந்து கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் உடல் நலம் தேறி வருகிறார். அவர் உட்கார்ந்து இருக்கிறார். பேசுகிறார் என்று சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் பூரண குணம் அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
முதல்-அமைச்சர் உடல்நலம் குறித்து சந்தேகம் என்பது வேறு. வேண்டும் என்றே அபாண்டமாக, அநியாயமாக எழுதுவது, செல்போன், பேஸ்புக் போன்றவற்றில் அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் ஜனநாயக நாட்டில் பொது கருத்துக்களை சொல்லலாம். ஆனால் காவல்துறை பழி வாங்குவதற்காக உள்நோக்கத் தோடு மற்றவர்களை, மற்ற கட்சிகளை ஒடுக்குவதற்கு வழக்குகள் பதிவு செய்ய கூடாது. காவல்துறை எச்சரிக்கையோடு முறையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த ஒரிக்கை பாலாற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஒரிக்கை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், குமார் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வாயலூர் பாலாற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாகர், முனுசாமி, சுரேஷ், ராதாகிருஷ்ணன், இளங்கோ ஆகியோரை கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்:
பழைய பல்லாவரம் வெங்கட்ராமன் நகர், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 8) அருகில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவன் நண்பர்களுடன் அருகில் உள்ள ராஜாமலை கல்குவாரி குட்டையில் குளித்தான்.
ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பலியானான். அவனது உடலை தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரையை சேர்ந்தவர் வேலு (வயது 50). கானாத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று காலை வேலைக்கு பஸ்சில் சென்றார். கானாத்தூரில் பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடந்தார்.
அப்போது வேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் காவலாளி வேலு மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
காலை 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது. ஆனால் 9.30 மணி வரை அங்கு போலீசார் வரவில்லை.
இதை கண்டித்தும், அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரியும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கானாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விரைந்து சென்று பொதுமக்களுடன் சமரசம் பேசினார்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் 6 மாதத்தில் 18 விபத்துகள் நடந்துள்ளன. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் வேகத்தடை அமைக்கப்பட வில்லை” என்றனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமரசம் செய்தனர்.
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என்று தெரிவித்தது. மேலும் காவிரியில் நீர் திறந்து விட மறுக்கும் போக்கிற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் மறியலில் பங்கேற்று கைதானார்கள்.
இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியை இன்று சந்திக்க முடிவு செய்தனர்.
அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேச இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. ஜனாதிபதியை சந்தித்தால் நியாயம் கிடைக்கும் என்பதற்காக அவரை மட்டும் சந்திக்க இருக்கிறோம். பிரதமரை சந்திக்கவில்லை.
பிரதமர் மோடி மறைமுகமாக கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார். கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்படுகிறது.
எனவே காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் அறிவுறுத்தும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்டம் குகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62), இவரது மகன் அரிஅரி கார்த்திகேயன் (24). இவர் சென்னை கேளம்பாக்கத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மகனை பார்ப்பதற்காக ராஜேந்திரன் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று வண்டலூர் வந்தார். தந்தையை அரிஅரி கார்த்தி கேயன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கேளம்பாக்கம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
கொளப்பாக்கம் அருகே சென்ற போது ராஜேந்திரன் கையில் வைத்திருந்த கைப்பை தவறி சாலையில் விழுந்தது. உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய ராஜேந்திரன், கீழே விழுந்த கைப்பையை எடுத்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி ராஜேந்திரன் மீது மோதியது.
இதில் மகன் கண்எதிரே ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். சாப்ட்வேர் இன்ஜினினீயர்.
இவரது மனைவி சத்திய மீனா. இவர் இன்று காலை 6-வது மாடியில் துவைத்த துணிகளை காய போட முற்பட்டபோது எதிர் பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இளவரசன். கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து புதுவை வந்த முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடக, புதுவை ஆகிய மாநிலங்களின் வாதத்தை கேட்டு உள்ளது. கர்நாடக சார்பாக தங்களிடம் தண்ணீர் இல்லை என்று செய்த மனுவையும் பரிசீலிப்பதாக கூறி உள்ளது.
மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை பரிசீலினை செய்த பிறகு தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
கர்நாடகா மாநிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. அது வருத்தமளிக்கிறது. காவிரி பிரச்சினை பற்றி பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். பதில் இன்னும் வரவில்லை.
நான் ஜனாதிபதியை சந்தித்து காவிரி பிரச்சினையில் தலையிட்டு தமிழகம், புதுவைக்கு இடைகாலத்தில் வழங்க வேண்டிய தண்ணீரையும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை வைத்து உள்ளேன். இது சம்பந்தமாக அரசிடம் பேசுவதாக அவர் கூறி உள்ளார்.
காவிரி பிரச்சினையில் புதுவை மாநிலத்தின் கருத்தை ராகுல் காந்தியிடம் கூறி உள்ளேன்.
புதுவையில் வீட்டுக்கு கழிப்பறை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கிராமம் மற்றும் நகரம் முழுவதுமாக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதிக்குள் கட்டிமுடிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்தோடுதான் செயல்படுகிறோம்.
புதுச்சேரியில் நெல்லிதோப்பு இடைத்தேர்தலின் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவிப்பார். தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்து அழைத்து உள்ளேன். வருவார் என்று நம்புகிறேன். மனு தாக்கல் செய்வதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் சந்திக்க உள்ளேன்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே இன்று காலை சாலையோரத்தில் வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது கை, கால் மற்றும் கண் துணியால் கட்டப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. தலைப்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். சட்டை இல்லை. ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்து இருந்தார்.
மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்து வீசி இருப்பது தெரிந்தது. கொலை செய்யப்பட்டது சென்னை அல்லது காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள். நள்ளிரவில் ஒரகடம் பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
கொடூரமாக வாலிபர் கொன்று வீசப்பட்ட சம்பவம் ஒரகடம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். இதில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட்டது.
தற்போதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது. இருப்பினும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? என்பது குறித்து மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம். இதனை அகில இந்திய தலைமை முறைப்படி அறிவிக்கும்.
உள்ளாட்சி தேர்தல் என்றால் கூட்டணியை மாநில தலைமை அறிவிக்கும். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கூட்டணியை அகில இந்திய தலைமை தான் அறிவிக்கும். எனவே இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஜனநாயக முறைப்படி தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். பணப்பட்டுவாடாவை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி பிரச்சினையில் தி.மு.க. - காங்கிரஸ் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்த வேண்டும். அவர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகா தண்ணீர் வழங்க வலியுறுத்த வேண்டும்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை யாரும் எப்போது வேண்டும் என்றாலும் சந்தித்து பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிண்டி மசூதி காலனியை சேர்ந்தவர் அசாருதீன். ஆட்டோ டிரைவர்.
கடந்த 16-ந்தேதி இரவு ஆதம்பாக்கத்தில் சிட்டி லிங்க் ரோட்டில் பஸ்நிறுத்தம் அருகே அசாருதீனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டி கொன்று விட்டு தப்பியது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு கிண்டியில் அருள்நிதி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு அசாருதீன் மீது உள்ளது. அதற்கு பழிக்கு பழி வாங்க அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அருள்நிதியின் நண்பரான கிண்டி மடுவங்கரையை சேர்ந்த ஜெய்குமார் தனது நண்பர்களுடன் கொலை சதியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெய்துரை, தர்மதுரை, அரிகரன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக ஆதம்பாக்கத்தை சேர்ந்த நாகூர்மீரான், டெம்போ மணிகண்டன், குட்டி, பிரசன்னகுமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி தே.மு.தி.க. பொறுப்பாளராக கே.என்.ஆர். ஜெயபாலை மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் பரிந்துரையின் பேரில் கட்சி தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.






