என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றேன்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய-மாநில அரசுகள் ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்.

    மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என்பது அந்தந்த கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் விருப்பம் என்றால் இந்த கூட்டத்தை ஏன் விமர்சிக்க வேண்டும்.

    அனைத்து கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இதனை விமர்சிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குற்றங்களை தடுக்க கம்பெனி உரிமையாளர்கள் வடமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்களை பெற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுகோட்டை சிப்காட், மாடம்பாக்கம் சிப்காட், ஒரகடம் சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

    இதில் தமிழ்நாட்டை சேர்ந்தர்களை தவிர ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணி செய்து வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் குற்ற சம்பவங்கள் நிகழும் போது, வடமாநிலத்தார் கொலை செய்யப்பட்டாலோ அல்லது தீ விபத்தில் இறந்து போனாலோ அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் கம்பெனி நிர்வாகத்தினரிடம் கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கம்பெனி நிர்வாகத்தினர். பணி செய்யும் வடமாநில ஊழியர்களிடம் உரிய அடையாள ஆவணம் பெறுதல் வேண்டும். கம்பெனியில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமிரா கட்டாயம் பொருத்த வேண்டும்.

    குற்றம் செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், இதுபற்றி கம்பெனி நிர்வாகத்தில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணய்யன், குமார், அசோகன் மற்றும் கம்பெனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    68-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கிய சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய உள்நாட்டு புறப்பாடு முனையத்தின் ஒன்றாவது நுழைவு வாயிலில் இன்று காலை 10.30 மணியளவில் இரண்டு பெரிய கண்ணாடிகள் கீழே விழுந்து நொறுங்கின.

    திருச்சி, ஐதராபாத், டெல்லி செல்ல இருந்த பயணிகள் அப்போதுதான் விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். இதனால் கண்ணாடி விழுந்து நொறுங்கியதால் அவர்கள் பதட்டம் அடைந்தனர். நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் விழுந்து நொறுங்குவது இது 68-வது முறையாகும்.

    உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் இருந்து வெளிநாடு விமான நிலைய புறப்பாடு பகுதிக்கு கார் ஒன்று வேகமாக சென்றது. அந்த காரில் இருந்து ஆணி போன்ற கம்பி தெறித்து கண்ணாடிகள் மீது பட்டதால் அவை உடைந்து விழுந்ததாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து வருவது தொடர் கதையாக உள்ள நிலையில் பயணிகளுக்கான பாதுகாப்பை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குரோம்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீயை அணைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி. இவரது வீட்டில் தனலட்சுமி (33) என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார்.

    இந்த வீட்டின் மாடியில் குடிசை அமைத்து அதில் ரமணி தங்கி இருக்கிறார். இன்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு ரமணி சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த தனலட்சுமி மாடியில் உள்ள ரமணியின் குடிசை தீப்பிடித்து எரிவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.

    உடனே தனலட்சுமியின் மகன் மகேஷ் (77), மற்றும் அக்கம் பக்கத்தினர் மேலே ஏறி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது.

    அப்போது எரிந்து விழுந்த தீ பக்கத்து ஓலை வீட்டிலும் விழுந்தது. இதனால் அந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது.

    இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மகேஷ் மற்றும் பத்மநாதன் ஆகியோர் காயம் அடைந் தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
    சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் சிப்பெட் நிறுவனத்தின் ஊழியர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அதன் வளாகத்தில் ஒரு நாள் அடையாள தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    ஆலந்தூர்:

    கிண்டியில் மத்திய அரசின் நிறுவனமான ‘சிப்பெட்’ இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் சிப்பெட் நிறுவனத்தின் ஊழியர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அதன் வளாகத்தில் ஒரு நாள் அடையாள தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தை இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிப்பெட் நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.250 கோடி லாபம் ஈட்டி உள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்க கூடாது. தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

    இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் பால கிருஷ்ணன் கூறியதாவது:-

    நான் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற கூடாது என்று மத்திய அரசிடம் மனு கொடுத்து உள்ளேன். அதை பரிசீலிக்கவில்லை. மத்திய மந்திரி ஆனந்தகுமார் எங்களை சந்திக்க முடியாது என்று கூறி விட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த போராட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன், பொதுச்செயலாளர் வெங்கட் ரமணா, சங்க நிர்வாகிகள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கிண்டி போலீசார் செய்து இருந்தனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைகால மீட்பு பணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 353 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த முறை மழை வெள்ளத்தினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நடப்பாண்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்தமுறை அதிகமாக பாதிக்கப்பட்ட 1128 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இந்த இடங்களை 51 மண்டலங்களாக பிரித்து அவற்றில் தாசில்தார், பிடிஓ, நகராட்சி கமி‌ஷனர், போக்குவரத்து, மின்சாரம், காவல் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு முதலுதவி அளிக்க 353 நபர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் பணிபுரிய 260 பொக்லைன் எந்திரங்களும், 55 ஜெனரேட்டர்களும், 1165 சிமிண்ட் மின்கம்பங்களும் தயார் நிலையில் உள்ளது.

    மீன்வளத்துறை சார்பில் நீச்சல் தெரிந்த 600 மீனவர்களும், 200 படகுகளும் தயாராக உள்ளன. வெள்ளத்தினால் வி‌ஷ பூச்சிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் 350 இருளர் இன மக்களும் தயாராக உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் பேரிடர் காலங்களில் 24 மணிநேரமும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி மையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது.

    பொது மக்கள் பாதிப்புகள் குறித்து 1077, 044- 27237107, 27237207 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருடாந்திர சராசரி மழை அளவு சுமார் 980 மி.மீ கடந்த ஆண்டு மாவட்டத்தில் 1808.60 மி.மீ மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலையூரில் தி.மு.க. மகளிர் அணி தலைவியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சேலையூர் அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா தேவி (37). இவர் பரங்கிமலை ஒன்றிய தி.மு.க. மகளிர் அணி துணை தலைவியாக உள்ளார்.

    இவர் இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

    ரேணுகாதேவி மொபட்டை நிறுத்தினார். உடனே 3 பேரும் இறங்கி வந்து ஒரு முகவரியை ரேணுகா தேவியிடம் கேட்டனர். அவர் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போது 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் தலை, முகத்தில் வெட்டினர். அவர் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    ரேணுகாதேவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அவரை குடும்ப தகராறில் வெட்டினார்களா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தே.மு.தி.க. நிர்வாகி வீட்டில் குண்டுவீசிய அ.தி.மு.க. பிரமுகர் மகனை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தண்டலத்தை சேர்ந்தவர் சசிகுமார். தே.மு.தி.க. ஒன்றிய நிர்வாகி. இவர் தண்டலம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்தார்.

    உள்ளாட்சி மன்ற தேர்தலில் தண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த மாதம் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சசிகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசியதில் ஜன்னல் கண்ணாடிகள், கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் குமார் என்பவரின் மகன் பாஸ்கர் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்தனர்.

    என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 3 முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

    சசிகுமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தெரியவந்தது. எனவே அவரை மிரட்டுவதற்காக என் நண்பர்களை வைத்து நாட்டு வெடிகுண்டுகளை அவர் வீட்டில் வீச வைத்தேன். பயந்து போய் அவர் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டர் என நினைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து பாஸ்கரை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.
    தி.மு.க. சார்பில் நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜனதா கலந்து கொள்ளாது என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்படும். தி.மு.க. சார்பில் நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜனதா கலந்து கொள்ளாது. தி.மு.க. அவர்களுடைய கூட்டணி கட்சிகளை முதலில் அழைத்து பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் ராணுவ இடத்தை பட்டா போட்டு விற்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்த கவுன்சிலரை கைது செய்தனர்.

    தாம்பரம்:

    தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை பதிவு செய்வதற்கு கோர்ட்டு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தையே ஒரு பெண் பட்டா போட்டு விற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    செய்யூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். திருவண்ணாமலையில் தையல் எந்திர நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் ஒரு வீட்டு மனையை விலைக்கு வாங்கியுள்ளார்.

    அந்த மனைக்கு ரூ.50 லட்சம் விலை பேசப்பட்டு ரூ.39 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த இடத்தை பத்திர பதிவு செய்த போதுதான் அந்த இடம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. போலியாக பட்டா தயாரித்து அந்த இடத்தை ஜோதி விற்பனை செய்துள்ளார்.

    இதை அறிந்ததும் கார்த்திகேயன் தான் கொடுத்து ரூ.39 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

    பணத்தை கொடுக்க மறுத்த ஜோதி அவரது கூட்டாளிகளான குட்டி என்ற ரமேஷ் உள்பட சிலருடன் சென்று கார்த்திகேயனை கொன்று விடுவதாக மிரட்டி இருக்கிறார்.

    இதுபற்றி கார்த்திகேயன் பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி குட்டி என்ற ரமேசை கைது செய்தனர். ஜோதி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டுள்ள குட்டி முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி. இதனை கண்டு ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மோகன் (வயது 40). எலக்ட்ரீசியன். இன்று காலை ஆதம்பாக்கத்திற்கு பணிக்கு சென்றார்.

    கக்கன் நகர் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது கிண்டி நோக்கி சென்ற டிப்பர் லாரி திடீரென மோகன் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதனை கண்டு ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, “சாலை ஓரத்தில் குடிநீர் பணிக்காக போடப்பட்ட ராட்சத குழாயால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும்” என்றனர்.

    இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் த.மா.கா. யாரை ஆதரிப்பது? அல்லது எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி வரும் 24-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    சின்னகாஞ்சீபுரத்தில் த.மா.கா. நிர்வாகி படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடை பெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் த.மா.கா. யாரை ஆதரிப்பது? அல்லது எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேச உள்ளேன்.

    அவர்களின் கருத்தை அறிந்த பின்பு அதன் அடிப்படையில் த.மா.கா.வின் முடிவு வருகிற 24-ந்தேதி (திங்கள்) அறிவிக்கப்படும்.

    3 தொகுதி தேர்தல்களும் முறைப்படி நடக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதி முடிவடைகிறது.

    தொடர்ந்து பணிகள் சிறப்பாக தொய்வின்றி நடக்க வேண்டும். எனவே தனி அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் காங்கிரசும் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. எனவே அந்த கட்சிகளை புறக்கணிப்பது அவசியம்.

    காவிரி பிரச்சனையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் துரோகம் இழைத்து விட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் புருஷோத் தமன் உடன் இருந்தார்.
    ×