search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபுதாபி, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 விமானத்தில் ரூ.45 லட்சம் தங்க கட்டி கடத்தல்: பெண் உள்பட 4 பேர் கைது
    X

    அபுதாபி, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 விமானத்தில் ரூ.45 லட்சம் தங்க கட்டி கடத்தல்: பெண் உள்பட 4 பேர் கைது

    அபுதாபி, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 விமானத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய பெண் உள்பட 4 பேர் கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    அபுதாபியில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தான் வைத்திருந்த பையை விமான நிலையத்தில் பணிபுரியும் 2 தற்காலிக ஊழியர்களிடம் கொடுத்தார்.

    பின்னர் சோதனை முடிந்து அந்த வாலிபர் வெளியே வந்து தற்காலிக ஊழியர்களிடம் இருந்து பையை வாங்கியதை அதிகாரிகள் பார்த்து மடக்கி பிடித்தனர். பையை சோதனை செய்த போது 1 கிலோ தங்க பிஸ்கட் இருப்பது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.

    அவர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த முகமதுகான் என்பது தெரிந்தது.

    1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் உதவியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் தங்கம் கடத்தலில் உள்ள பின்னணி குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரை சோதனை செய்த போது புடவையில் 200 கிராம் தங்க கட்டியை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த ராஜம்மாள் என்பது தெரிந்தது.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ரமேஷ், கண்ணன் ஆகியோரை சோதனை செய்த போது இருவரும் ஆசன வாயிலில் தலா 200 கிராம் தங்க கட்டியை மறைத்து கடத்தியதை கண்டுபிடித்தனர்.

    3 பேரிடம் இருந்து 600 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். கைதான அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×