என் மலர்
செய்திகள்

பெருங்களத்தூரில் வீட்டில் பரிகாரபூஜை செய்வதாக நகை கொள்ளை: 2 வாலிபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்மஅடி
தாம்பரம்:
பழைய பெருங்களத்தூர், சிவசண்முகம் சாலையில் வசித்து வருபவர் சிவனேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காளீஸ்வரி.
இன்று காலை அவர்களது வீட்டிற்கு 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது சிவனேசனிடம் ‘‘உங்கள் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளது. பரிகாரபூஜை செய்தால் சரியாகி விடும்’’ என்றனர்.
இதனை நம்பிய சிவனேசன் பரிகார பூஜை செய்ய சம்மதித்தார். பூஜை செய்து கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் தங்க நகையை துணியில் கட்டி வைக்க கூறினர்.
இதையடுத்து காளீஸ்வரி 3 பவுன் நகையை துணியில் கட்டி சாமி படம் முன்பு வைத்தார். பூஜை முடிந்ததும் 2 வாலிபர்களும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே சந்தேகம் அடைந்த காளீஸ்வரி நகை இருந்த துணியை பிரித்து பார்த்த போது எதுவும் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் கணவரிடம் தெரிவித்தார். பூஜை செய்வதாக ஏமாற்றி 2 வாலிபர்களும் நகையை திருடி செல்வது தெரிந்தது.
இதுபற்றி தெரிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் 2 வாலிபர்களையும் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அவர்களை பீர்க்கன்கரணை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.






