search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க.-காங்கிரசும் காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    X

    காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க.-காங்கிரசும் காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

    காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க.-காங்கிரசும் தான் காரணம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனைக்காக தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு இந்த பேராட்டத்தை முன் நிறுத்தி உள்ளது.

    அதே போல் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி தமிழகத்துக்கு செய்த துரோகத்தை மறைக்க கூடிய வகையில் போராட்டத்தை நடத்தி இருக்கிறது.

    இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் இன்று யாரை வைத்து போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்? இந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கும் போது விவசாயிகள் வயிற்றில் அடித்தது. இவர்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.

    காவிரி பிரச்சனைக்கு தி.மு.க.- காங்கிரசும்தான் காரணம். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தி.மு.க. காவிரி பிரச்சனையில் ஏன் அவர்களுக்கு சாதகமாக சென்றது? வாஜ்பாய் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு எல்லா முயற்சிகளும் மேற்கொண்டார்.

    அப்போது தமிழ்நாட்டில் இருந்து ராகுல்காந்தி ஒரு பேட்டி அளித்தார். அவராலேயே அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இன்று நதிநீர் இணைப்பு திட்டம் வந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகள் நமக்கு வந்து இருக்காது.

    காங்கிரஸ் மற்றும் தி.மு.க. செய்த தவறுகளை சரி செய்வதற்கு கால அவகாசம் மத்திய அரசுக்கு தேவைப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால்தான் மேலாண்மை குழு போன்ற வி‌ஷயங்களை நிதானமாக கடைபிடிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது.

    கண்டிப்பாக பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வேண்டிய தண்ணீரை தொடர்ந்து பெற்று தருவார்.

    மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடிய செயல்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவார். தி.மு.க., காங்கிரசின் போராட்டம் விவசாயிகளை ஏமாற்றும் செயல்.

    இவர்கள் காவிரி பிரச்சனை பற்றி பேச அருகதையற்றவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக தடகள வீராங்கனை சாந்தி தனக்கு பதக்கம் வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது பற்றி பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, திறன் உள்ளவர்கள், தகுதி உள்ளவர்களுக்கு மத்திய அரசு கண்டிப்பாக உதவும்.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×