என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாமல்லபுரம் அருகே மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற புதுமாப்பிள்ளை சொத்துக்காக கடத்திக் கொலை செய்யப்பட்டார். போலீசார் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
    மாமல்லபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நைனார்குப்பத்தை சேர்ந்த ரங்கீலா என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

    அக்டோபர் 8-ந்தேதி கார்த்திக் தனது மனைவியுடன் மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காட்டு குப்பத்தில் உள்ள ரங்கீலாவின் பெரியம்மா மகள் ரஞ்சிதாவின் வீட்டுக்கு சென்றார். ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு (38) சினிமா ஸ்டண்ட் மாஸ்டர். அங்கிருந்த கார்த்திக் திடீரென மாயமானார்.

    இதுகுறித்து அவரது மனைவி ரங்கீலா மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல்போன கார்த்திக்கை தேடிவந்தனர்.

    இதற்கிடையில் ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு கார்த்திக்கை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறி செங்கல்பட்டு கோர்ட்டில் அக்டோபர் 25-ந் தேதி சரண் அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

    விசாரணையின்போது டில்லிபாபு போலீசாரிடம், “என்னுடைய மனைவி ரஞ்சிதாவின் சித்தி மகள் ரங்கீலாவின் சொத்தை அபகரிப்பதற்கு அவரது கணவர் கார்த்திக் தடையாக இருந்தார். இதனால் அக்டோபர் 8-ந்தேதி கூலிப்படையின் துணையோடு அவரை செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து அங்குள்ள பாலாற்று கரையோரம் புதைத்தேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.

    மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை இன்று (சனிக்கிழமை) மாமண்டூர் அழைத்துச் சென்று கார்த்திக் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண உள்ளனர். அதன்பின்னர் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் முன்னிலையில் கார்த்திக்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே அரசு டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகே அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

    டில்லிபாபு தமிழ் சினிமாவில் 3 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    பரங்கிமலை அருகே ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தாம்பரம்-கடற்கரை சேவையில் தாமதமானது.
    ஆலந்தூர்:

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு ஒரு மின்சார ரெயில் பீச் ஸ்டேசன் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சென்ற போது தண்டவாளத்தில் இருந்து அதிகமான சத்தம் கேட்டது.

    இதுகுறித்து ரெயில் டிரைவர் பரங்கிமலை ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். உடனே ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று தண்டவாளத்தை சோதனை செய்தனர். அப்போது பரங்கிமலை நிதி மேல்நிலை பள்ளி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் போராடி ஊழியர்கள் அதை சரி செய்தனர். இந்த திடீர் விரிசல் தாம்பரம்- கடற்கரை ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் சென்றன. ரெயில் பயணிகள், மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    ஆதம்பாக்கத்தில் பணத்தகராறில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் இ.பி. காலனி ராமகிருஷ்ண நகரை சேர்ந்தவர் மனோகரன் (65) வியாபாரி. இவரது மகன் கணேசன் (38) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.

    கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கணேசன் தந்தை மனோகரனுடன் வசித்து வந்தார்.

    கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனோகரனை தொந்தரவு செய்து வந்தார். இதனால் மனோகரனுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு கணேசன் மது குடிக்கவும், தனது மனைவி நகையை அடகு மீட்கவும் மனோகரனிடம் ரூ.2 லட்சம் கேட்டார்.

    ஆனால் மனோகரன் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் மனோகரனை கையால் பலமாக தாக்கினார். இதனால் மனோகரன் மயங்கி கீழே விழுந்தார்.

    தகவல்அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் வரைந்து சென்று மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
    மத்திய அரசின் ஜீப் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்று சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

    கேள்வி:- முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்பு மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு மற்றும் ஜி.எஸ்.டி மசோதாவை ஆதரிக்கவில்லை. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது தமிழக அரசு ஆதரவு தந்துள்ளது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

    பதில்:- உணவு பாதுகாப்பு மற்றும் ஜி.எஸ்.டி மசோதாக்களுக்கு தமிழகம் ஆதரவு தந்து இருக்கிறது என்பது மாநிலத்திற்கு பல்வேறு நல்லது எது என்று யோசித்து முடிவு எடுத்து இருக்கக்கூடும். இது முதல்வருடைய கவனத் திற்குட்பட்டு தான் முடிவு எடுக்க கூடும்.

    முதல்-அமைச்சருடைய இலாக்காக்கள் கட்சியின் மூத்த தலைவர், ஏற்கனவே இந்த பதவிகளை வகித்த ஓ. பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடுகள் ஒரே மாதிரியாகதான் உள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த ஜீப் தேர்தலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஏழை -எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலுவதற்கு வாய்ப்பு தர வேண்டும், சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். பணத்தை கொடுத்து சேரலாம் என்ற நிலை இருக்கக் கூடாது. அதனால் தமிழகம் பாதிப்பு அடைய கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க இரண்டு ஆட்சிகளிலும் கொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராணுவ வீரர் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை கைது செய்தது உரிமை மீறிய செயல் என்று நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

    சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் இடைத்தேர்தலை காட்டிலும் என்னுடைய மாநிலத்தின் உரிமைக்காக கலந்து கொள்ள செல்கிறேன்.

    நீட் தேர்வு எழுத மாநிலத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு உகந்த பாடங்கள் நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும்.

    நெல்லிக்குப்பம் இடைத்தேர்தலில் 16 கட்சிகள் ஆதரவு காங்கிரசுக்கு இருக்கிறது. மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை கைது செய்து அவரின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பது இயல்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாமல்லபுரத்தில் ஆட்டோ டிரைவர் கடத்தப்பட்டரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று மதியம் மாமல்லபுரம் கோவளம் சாலையில் ஆட்டோவுடன் பயணிகளுக்காக காத்து இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயக்குமாரை மிரட்டினர். பின்னர் அவரை தங்களது பைக்கில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் சோதனைச்சாவடி மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

    இந்நிலையில் மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு ஜெயக்குமார் பதட்டத்துடன் வந்ததார். அவர் போலீசாரிடம் கூறும் போது, கண்ணையும் வாயையும் கட்டி பைக்கில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

    போலீசார் உஷாராவது தெரிந்ததும் பூஞ்சேரியில் கொண்டுவந்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் யார்? எதற்காக என்னை கடத்தினார்கள் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

    ஜெயக்குமார் முண்ணுக்கு பின் முரணாக சந்தேகத்திற்கிடமாக தகவல் தெரிவித்து வருவதால் அவர் மீதும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பெண்கள் விவகாரம் அல்லது கடன் பிரச்சனை ஏதும் உள்ளதா? கடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் மாமல்லபுரம் கோவளம் சாலை பரபரப்பாக காணப்பட்டது.
    வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கால்நடைகளுக்கு உரிய மருத்துவ உதவியினை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது:-

    கால்நடைகள் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்காக அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 2015 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.

    கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தின் கண்காணிப்பில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கால்நடைகளுக்கு உரிய மருத்துவ உதவியினை பெறலாம்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 2 ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்போர், விவசாயிகள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவர். மேலும் சாலைகளில் அடிபட்டு அவதிப்படும் கால்நடைகளுக்கும் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் பெரிதும் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டில் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டகோரி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கடந்த ஆண்டு பருவ மழையின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.

    நீஞ்சல்மடு கால்வாயில் தண்ணீர் நிரம்பி வெளியேறியதில் திம்மாவரம் ஊராட்சி மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. சுமார் ஒரு மாதம் அப்பகுதி மக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து குடியிருப்பை ஒட்டியுள்ள நீஞ்சல்மடு கால்வாயில் உயரமாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று மகாலட்சுமி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த பணி நடைபெறவில்லை.

    இதனை கண்டித்தும், கால்வாயில் தடுப்பு சுவர் கட்ட கோரியும் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் மோகன் தலைமையில் செங்கல்பட்டு டவுன் பழைய பஸ் நிலையத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் செங்கல்பட்டு நகர வளர்ச்சி சங்க செயலாளர் ராஜன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு மற்றும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
    கானத்தூர் அருகே பள்ளி வேன் மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
    திருவான்மியூர்:

    புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை 12 மணிக்கு அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. கானத்தூர் எம்.ஜி.எம். அருகே பஸ் வந்த போது தனியார் பள்ளி வேன் மீது பஸ் பயங்கரமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் இடது புறம் திரும்பி மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளி வேனில் மாணவ- மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    டெல்லியில் நடந்த இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது என்று தமிழக மீனவ பிரதிநிதிகள் பேட்டியளித்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    புதுடெல்லியில் நேற்று தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடந்தது.

    இதில் பங்கேற்று சென்னை திரும்பிய தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    டெல்லியில் நடந்த இரு நாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நல்ல முறையில் நடந்தது. மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு மீனவர்களும் மனம் திறந்து பேசினோம். அனேக வி‌ஷயங்களை பரிமாறி கொண்டோம்.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 114 படகுகள் மீட்க வேண்டும். 83 நாட்களுக்கு மூன்று வருடத்துக்கு இந்திய எல்லையில் மீன் பிடிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம்.

    வருகிற 5-ந்தேதி இந்தியா- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள், மீனவ துறை அமைச்சர்கள் பேச இருக்கிறார்கள். அதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.

    மீனவர் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடையாத வகையில் முடிவு எடுக்கப்படும் என்று கூறி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.
    கந்தன்சாவடி கல்குட்டை பகுதியில் கழிப்பறை, சாலை வசதி செய்து தரக்கோரி இளைஞர்கள் மொட்டையடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
    திருவான்மியூர்:

    சென்னை பெருங்குடி கந்தன் சாவடி அருகே கல்குட்டை பகுதி உள்ளது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிக்கு பல வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் எதுவும் இல்லாததால் மக்கள் பல போராட்டங்கள் நடத்தினார்கள்.

    அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டனர். அதன் பேரில் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் அனீஷ்குமார் தலைமையில் வாலிபர்கள் திரண்டு வந்து கந்தன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே திடீர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் 11 பேர் திடீரென நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்து கொண்டனர். அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.- தி.மு.க. மக்கள் பிரதிநிதிகள் யாரும் அடிப்படை வசதிகளை செய்து தந்ததில்லை. இன்னும் கழிப்பறை, சாலை வசதியின்றி கஷ்டப்படுகிறோம்.

    கல்குட்டை பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தி மொட்டையடித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றனர்.

    அப்பகுதிக்கு வந்த போலீஸ் உதவி கமி‌ஷனர் அய்யப்பன் போராட்டம் நடத்திய வாலிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ. 5 லட்சம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம், ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்றார். நள்ளிரவில் வந்த மர்மகும்பல் ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான வயர், பொருட்களை சுருட்டி சென்று விட்டனர்.

    இன்று காலை கடையின் ‌ஷட்டர் உடைந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×