என் மலர்
காஞ்சிபுரம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மந்திரிசபையை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு உள்ளனர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. தமிழகத்தின் கலாசாரத்தை விளக்கக் கூடியது.
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வருத்தத்துக்குரியது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தன் ஒரு முடிவு காணமுடியும் என ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக பிரதமர் மோடி தனது மந்திரிசபையை கூட்டி அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும். பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடத்த பிரதமர் உதவிபுரிவார் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என போராட்டங்கள் வலுப்பெறுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என விரும்புகின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
துரைப்பாக்கத்தை அடுத்த பெருங்குடி, சீவரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் உஷா. இவரது மகன்கள் ராஜீ, ரவி (வயது23). ராஜீ திருமனம் ஆகி குடும்பத்துடன் பெரும்பாக்கத்தில் வசித்து வந்தார்.
கடந்த 14-ந்தேதி உஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து ராஜீ பெற்றோர் வீட்டுக்கு வந்து இருந்தார்.
நேற்று இரவு குடிபோதையில் இருந்த ரவி, அண்ணன் ராஜீவிடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ராஜீ மரக்கட்டையால் ரவியை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜீவை கைது செய்தனர். ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
சொத்து தகராறில் தம்பியை அண்ணன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள சிலை புதுப்பிக்கப்பட்டது. அந்தச் சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று பகல் 11.50 மணிக்கு திறந்து வைத்தார். முன்னதாக ராமாவரம் தோட்ட இல்லத்தின் வாசலில் உள்ள கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.
சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் பள்ளி மாணவ-மாணவிகள் இருபுறமும் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ராமாவரம் தோட்ட இல்லத்தின் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர்-வாய்பேச முடியாதோர் பள்ளிக்கு சென்றார். அங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

இதில் சசிகலா கலந்து கொண்டு அந்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். மாணவ-மாணவிகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவிகள் வழங்கினார்.
மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அவர்களுடன் சசிகலாவும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து அவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் ஏராளமானோர் சொந்த வாகனங்களிலும், பஸ்களிலும் திரும்பியதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையின் நுழைவு பகுதியான பெருங்களத்தூரில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூருக்கு வாகனங்கள் வர சுமார் 2 மணிநேரம் ஆனது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசலால் பெருங்களத்தூரில் இருந்து ஏராளமானோர் மின்சார ரெயிலில் சென்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோயம்பேடுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வண்டலூர் பாலத்தில் இருந்து மண்ணிவாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டது.
காணும் பொங்கலையொட்டி வண்டலூர் பூங்காவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடுவது வழக்கம்.
குடும்பத்துடன் வரும் அவர்கள் நாள் முழுவதும் பூங்காவில் உற்சாகமாக பொழுதை கழித்து செல்வார்கள்.
கடந்த மாதம் வீசிய ‘வார்தா’ புயலின் போது வண்டலூர் பூங்காவில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் சரிந்தன. சேதம் அடைந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகள் இன்னும் சீரமைக்கப்படாததால் பூங்கா மூடியே கிடக்கிறது.
காணும் பொங்கலையொட்டி பூங்கா திறக்கப்படும் என்று பொது மக்கள் எதிர் பார்த்து இருந்தனர். ஆனால் மரக்கழிவுகள் முழுமையாக அகற்றப்படாததால் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் அறிவித்தனர். இது தொடர்பான அறிவிப்பு பலகை பூங்கா வாசல் முன்பு வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் காணும் பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வண்டலூர் பூங்கா பகுதி உற்சாகம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுபற்றி அறியாத ஏராளமான பொது மக்கள் இன்று காலை பூங்காவுக்கு வந்தனர். பூங்கா மூடப்பட்டிருப்பது தெரிந்ததும் அவர்கள் அருகில் உள்ள கிண்டி பூங்கா மற்றும் மெரினா கடற்கரை, பழவேற்காடு பகுதிகளுக்கு காணும் பொங்கலை கொண்டாட சென்றனர்.
இது குறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காணும் பொங்கலுக்குள் பூங்காவை சீரமைத்துவிட வேண்டும் என்று பணிகள் நடந்தது.
ஆனால் மரக்கழிவுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்கா திறக்கப்படவில்லை, சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.
கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் இமயம் ரவி (வயது 48). ஓவியரான இவர் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்தார்.
கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இமயம் ரவி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.
மறுநாள் 12-ந்தேதி காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் பலத்த காயத்துடன் ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான இமயம் ரவி என்பது தெரிந்தது. அவரை மர்மகும்பல் அடித்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக ஓரிக்கை, பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
செல்போன், பணத்தை பறிக்க முயன்றபோது தடுத்ததால் இமயம் ரவி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
பைரவா திரைப்படம் கடந்த 12-ந் தேதி ரிலீஸ் ஆனது. இதற்காக 11-ந் தேதி இரவே ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் செய்யப்பட்டுள்ள அலங்கார ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக 11-ந் தேதி இரவு இமயம் ரவி வந்து இருக்கிறார்.
பின்னர் நள்ளிரவு அவர் ஷேர் ஆட்டோவில் பஸ் நிலையத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது 3 மர்மநபர்கள் இமயம் ரவியிடம் இருந்த செல்போன், பணத்தை பறிக்க முயற்சித்து உள்ளனர்.
இதனை தடுத்த இமயம் ரவியை அவர்கள் அடித்து கொலை செய்து இருக்கிறார்கள். பின்னர் அவரது உடலை பாலாற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடமும் இருந்து ரூ. 250 , செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான 3 பேரும் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இன்று மாலை கொலையாளிகள் குறித்த விவரத்தை போலீசார் தெரிவிக்கிறார்கள்.
கைதான 3 பேருக்கும் இமயம் ரவிக்கும் வேறு ஏதேனும் மோதல் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேருர் தாலுக்கா அரசாணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் விஜய் (வயது 24).
கேரளாவில் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து சொந்த ஊரான அரசாணிமங்கலம் வந்துள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜய் திரும்பி வரவில்லை. அவர் நண்பர்களை பார்த்து வருவதாக கூறி இருந்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் அரசாணி மங்கலம் காலனி செல்லும் பகுதியில் விஜய் கை மற்றும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து உத்திரமேருர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கொலையுண்ட விஜயும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் வேளச்சேரிக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த விஜயின் காதலி கடந்த மாதம் தற்கொலை செய்து இருக்கிறார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் விஜய் மீது கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பொங்கலையொட்டி விஜய் சொந்த ஊருக்கு வந்து இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. இந்த காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விஜய்க்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. அது அந்த மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு. தமிழகத்தில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்கிறார்கள். அது இந்த மாநில அரசின் நிலைப்பாடு.
ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்ற தடைக்கு எதிராக தற்போது இளைஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது தமிழர்களின் கோபத்தின் வெளிப்பாடு. இதுவும் ஒரு வகையான அறப்போராட்டம்.
பீட்டா அமைப்புகள் இந்திய கலாச்சாரம், தன்மை, பாரம்பரியம் மற்றும் உயிரினங்களை ஒழிக்க வேண்டும் என்று புகைப்படம் எடுத்து உச்சநீதிமன்றத்தில் கொடுத்து மிருகங்கள் வதைக்கப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கி இருக்கிறார்கள்.
மேலும் இப்போது நடைபெறுகிற ஜல்லிக்கட்டை புகைப்படம் எடுத்து நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி விடுவார்கள். அதனால் இதனை ஜல்லிக்கட்டு என்று சொல்ல மாட்டேன். மக்கள் நடத்தும் அறப்போராட்டம்.
இந்த பிரச்சனை பா.ஜ.க. வினாலோ, மத்திய அரசாலோ ஏற்படவில்லை. இது நூறு சதவீதம் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்த போது செய்த துரோகம்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பா.ஜனதா கடந்த வருடம் அனுமதி பெற்றது. தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு வருடமாக இவர்கள் யாரும் எதுவும் செய்யவில்லை. இப்போது போராட்டம் நடத்துகின்றனர். இவர்கள் பீட்டா அமைப்பு பின்னால் போய் விட்டார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் தேவராஜ் நகரில் வசித்து வருபவர் இம்தியாஸ். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.
இன்று காலை அவரது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 9 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
குரோம்பேட்டையை அடுத்த சானட்டோரியம் ஜெயா நகரில் வசித்து வருபவர் வைத்தியநாதன். சேலையூரில் இருசக்கர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஆஷா. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, வைர நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.
திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயார் கிராமத்தில் நேற்று மாலை தே.மு.தி.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பிரேமலதா விஜயகாந்த் கிராமப் பெண்களுடன் இணைந்து பொங்கலிட்டார். பின்பு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-
விவசாயிகளை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். இந்த வீர விழாவில் நடைபெறும் ரேக்ளாரேஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் என் படங்களில் கூட அக்காட்சியை வைத்திருப்பேன்.
என்னால் அதிகம் பேச முடியாது. ஏனென்றால் நான் கீழே குனிந்தேன் என்றால் எனக்கு கண்ணில் தண்ணீர் வந்துவிடும். அதனால்தான் பேசுவதில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்கு வந்த போதும் கூட கீழே இறங்கும் போது பார்த்து பார்த்து இறங்கி வந்தேன். இதை பார்த்த மீடியாக்கள் நான் தள்ளாடுகிறேன் என்று எழுதி விட்டன.
அதைபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் 100 வயது வரை உயிர் வாழ்வேன். எனக்கு எந்த வியாதியும் கிடையாது. என் மனைவி இருக்கும் வரையில் என்னை எந்த வியாதியும் நெருங்காது.
இயற்கையாக கிடைத்த நீரை தேக்கி வைக்காமல் இப்போது அண்டை மாநிலங்களிடம் நீருக்காக கையேந்தி நிற்கிறது இந்த அரசு. ஆண்ட கட்சியும் இப்படி தான். ஆளும் கட்சியும் இப்படித்தான்.
சோறு கொடுத்த விவசாயிக்கே சோறு இல்லை. இதுதான் இந்த ஆட்சியின் நிலை. ஜல்லிக்கட்டினை நடத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். நான் நல்லதை தான் சொல்வேன். ஆனால் எந்த மீடியாவும் எனக்கு ஆதரவு தருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அபுசாலி (வயது 34). பல்லாவரம் நகர அ.தி.முக. சிறுபான்மையினர் பிரிவு பொருளாளராக இருந்து வந்தார்.
இவர் பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி, திருநீர்மலை சாலையில் இரும்பு கடை நடத்தி வந்தார்.
நேற்று மதியம் அபுசாலி கடையில் இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த அபுசாலியை சரமாரியாக வெட்டி கொன்று தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் அபுசாலியின் உறவினரான கிண்டியை சேர்ந்த இரும்பு வியாபாரி முகமது அலி ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையை சேர்ந்த பிரபல தாதா ரபீக் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மேலும் பல வியாபாரிகளை மிரட்டி ரவுடி ரபீக் பணம் பறித்து வந்ததாக தெரிகிறது. முகமது அலி கடத்தப்பட்டபோது அபுசாலிதான் போலீசில் புகார் செய்ய வைத்து ரபீக்கை கைது செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் ரவுடி ரபீக் கூலிப்படையினரை ஏவி அபு சாலியை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஏற்கனவே கைதாகியுள்ள ரவுடி ரபீக் தற்போது புழல் சிறையில் உள்ளான். அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.
கொலை நடந்த போது அபுசாலியின் கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகியுள்ளது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். அபுசாலிக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் ராதே ஷியாம் (30). இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது.
அவர் ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் ஏறி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.
மாவட்டத்தின் பலபகுதிகளில் சுற்றி திரிந்த அவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுப்பட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் மீட்டனர். பின்னர் அவரை மறு வாழ்வு மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் ராதே ஷியாமிற்கு சில மாதத்துக்கு முன்பு நினைவு திரும்பியது. தன்னைப்பற்றிய விபரங்களை அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து ராதே ஷியாமை குடும்பத்தினருடன் சேர்க்க மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டார். இதுபற்றி உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ராதே ஷியாமின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் காஞ்சீபுரம் வந்தனர். கலெக்டர் கஜலட்சுமி, ராதே ஷியாமை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்த குடும்பத்தினர் அவரை கண்ணீருடன் கட்டித்தழுவிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது.






