என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் கொலையில் 3 பேர் கைது
    X

    காஞ்சீபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் கொலையில் 3 பேர் கைது

    காஞ்சீபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் இமயம் ரவி (வயது 48). ஓவியரான இவர் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்தார்.

    கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இமயம் ரவி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.

    மறுநாள் 12-ந்தேதி காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் பலத்த காயத்துடன் ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான இமயம் ரவி என்பது தெரிந்தது. அவரை மர்மகும்பல் அடித்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக ஓரிக்கை, பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    செல்போன், பணத்தை பறிக்க முயன்றபோது தடுத்ததால் இமயம் ரவி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    பைரவா திரைப்படம் கடந்த 12-ந் தேதி ரிலீஸ் ஆனது. இதற்காக 11-ந் தேதி இரவே ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் செய்யப்பட்டுள்ள அலங்கார ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக 11-ந் தேதி இரவு இமயம் ரவி வந்து இருக்கிறார்.

    பின்னர் நள்ளிரவு அவர் ஷேர் ஆட்டோவில் பஸ் நிலையத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது 3 மர்மநபர்கள் இமயம் ரவியிடம் இருந்த செல்போன், பணத்தை பறிக்க முயற்சித்து உள்ளனர்.

    இதனை தடுத்த இமயம் ரவியை அவர்கள் அடித்து கொலை செய்து இருக்கிறார்கள். பின்னர் அவரது உடலை பாலாற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடமும் இருந்து ரூ. 250 , செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான 3 பேரும் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இன்று மாலை கொலையாளிகள் குறித்த விவரத்தை போலீசார் தெரிவிக்கிறார்கள்.

    கைதான 3 பேருக்கும் இமயம் ரவிக்கும் வேறு ஏதேனும் மோதல் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×