என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிபொழிவு அதிகமாக காணப்படுகிறது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப் புகை படர்ந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முன் விளக்கை எரிய விட்டப்படி மெதுவாக சென்றனர்.
பனிமூட்டத்தால் மாமல்லபுரத்துக்கு வரும் காலை நேர பேருந்துகள் அனைத்தும் தாமதமாக வந்து சென்றது. காலை 9.30-க்கு பின்னரே பனிமூட்டம் விலகி இயல்பு நிலை திரும்பியது.
சென்னையில் இருந்த தாய்லாந்து செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை தாய்லாந்து செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்துல் பாசிப், முகமது ரியாசுதீன் ஆகியோரது சூட் கேசை சோதனை செய்த போது கட்டுகட்டாக அமெரிக்க டாலர் யூரோ பணம் கடத்தி வந்தது தெரிந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 60 லட்சம் ஆகும். வெளிநாட்டு பணம் குறித்து இருவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அப்துல்யாசிப், முகமது ரியாசுதீன் ஆகியோரது விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தி.மு.க.வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காந்தி சாலை பெரியார் நினைவு தூண் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு தலைவருமான ஜெகத்ரட் சகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சிந்தனை செய்ய விடாமல் கூவத்தூர் என்ற தனி காட்டில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களின் போன்கள் பிடுங்கப்பட்டு வீட்டு தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவர்களை வேறு வகையில் கவனம் செலுத்த விடாமல் எல்லாவற்றையும் கவனித்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்குப்பெற வைத்துள்ளனர். இது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமம்.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அல்லது வாக்கெடுப்பை ஒருவார காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றுதான் கூறினோம். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனை கண்டித்த தி.மு.க. உறுப்பினர்கள் சபை காவலர்களால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம்.
அடிமையாக்கப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள். நாங்கள் உரிமை கேட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயக படுகொலை.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சீபுரம் காந்தி சாலையில் எம்.வி.எம். பச்சையப்பாஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் காஞ்சீபுரத்தில் 4 இடங்களில் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
காந்தி சாலையில் உள்ள கடையில் காஞ்சீபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை அவர் கடையில் உள்ள லிப்டின் மேல் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு ஊழியர், ஜாகீர் உசேன் இருப்பதை கவனிக்காமல் லிப்டை இயக்கியதாக தெரிகிறது. லிப்ட் இயங்கியதால் அதில் சிக்கிய ஜாகீர் உசேன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஜவுளிக்கடை முன்பு ஏராளமானோர் திரண்டனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர். மேலும் ஜாகீர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
இவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரி, தாய் அம்பாலட்சுமி (வயது 83) ஆகியோர் பெரிய பாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
நேற்று காலை கிராம மக்கள் நடத்திய ஆயுள் ஹோமம் நிகழ்ச்சியில் அம்பாலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அம்பாலட்சுமி இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், உறவினர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை அம்பாலட்சுமியின் உடல் தண்டலம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சக இணைச்செயலாளர் அப்ரஜிதா சாரங்கி தலைமையில், இயக்குநர் காயா பிரசாத், வல்லுனர் குழுவினர் கோனல் குல்ஷ்ரேஸ்தா, பங்கஜ்டுபேர்கர், நிதேஷ்குமார், ஜிதேந்திர ஆனந்த், விபேக் ஆனந்த், சுமன்ஜித் அய்ச், சதீஷ்ரஞ்சன் சின்கா, விக்ரம் பர்கவா ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஞ்சை அரசன்தாங்கில் ரூ.8.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தையும், களக்காட்டூரில் ரூ.3.50 லட்சம் செலவில் பட்டுப்புழு வளர்ப்பதற்கான மல்பெரி செடி வளர்க்கப்படுவதையும், ரூ.1.64 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.
பின்னர் வெள்ளப்புதூர்- வேடந்தாங்கல் சாலையில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர மரங்கள் நடப்பட்டுள்ளதையும், ரூ.21.85 லட்சம் மதிப்பீட்டில் பசுமைகுடில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, நாற்றங் காலில் வளர்க்கப்பட்டுவரும் பல்வேறு செடிகள் குறித்தும், எங்கெங்கு நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளபுதூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மண்புழு உரம் தயாரிக்க மேற்கொள்ளப் பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ரூ.21 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீள் நிரப்புக்குபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேடந்தாங்கல் ஊராட்சியில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
சித்தாத்தூர் கிராம குளம் ரூ.15.45 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதையும், நீர்வரத்து உபரிநீர் செல்ல தேவையான கட்டமைப்பு மற்றும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு அதன் ஆழம், அதில் தேங்கும் தண்ணீரின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தா, மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் முத்து மீனா, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆலந்தூர்:
புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய ஓட்டெடுப்பாக நடத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சபா நாயகர் அனுமதித்து இருக்க வேண்டும்.
சட்டசபையில் கூச்சல்- அமளி நிலவினாலும் கடும் அமளி ஏற்பட்டாலும் சபை சுமூகமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. பாராளுமன்றத்தில் இதேபோல் அமளி நிலவினால் சபாநாயகர் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சியை அழைத்து பேசி சபை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுப்பார்.

தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சிகளை குறிப்பாக தி.மு.க. உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றிவிட்டு ஆளுங் கட்சி எம்.எல்.ஏக்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சரியல்ல. ஜனநாயகத்துக்கும், சட்டசபை விதிமுறைகளுக்கும் எதிரானது.
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருப்பது சரியானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் அறிக்கையில் 500 மதுக்கடைகளை மூடுவது என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று முன்னாள் முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தற்போதைய முதல்- அமைச்சர் அது பற்றி தனது முதல் அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர் பார்த்தேன்.
அதுபற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக சட்டசபையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நடந்து கொண்டது ஏற்புடைய தல்ல. தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் தேர்ந்து எடுக்கப்பட்ட இரு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் நடந்து கொண்டனர். இது சட்ட சபை வரலாற்றில் பெரிய அவமானத்தை இருகட்சிகளும் ஏற்படுத்திவிட்டன.
தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை-கொலை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
சட்டசபையில் யாருக்கு வேஷ்டி இருக்கிறது, யாருக்கு சட்டை இருக்கிறது என்று கூட தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமிகள் கொலை மற்றும் பெண்கள் வன்கொடுமை நடந்ததை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான முனையம் வருகை பகுதியில் கழிவறை உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு தொழிலாளர்கள் சென்றனர்.
அங்கு கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் பை இருந்தது. அதைப் பார்த்த ஊழியர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு போலீசாருடன் விரைந்து வந்த அதிகாரிகள் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் அந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தபின் அந்த பேக்கை பிரித்து பார்த்தனர்.
அதில் 500 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை விமானத்தில் கடத்தி வரப்பட்டிருக்கலாம். சுங்க துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கழிவறையில் வைத்து விட்டு சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை கடத்தி வந்தது யார் என்பதை அறிய விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா வீடியோ பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மால்லபுரத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் ஸ்தலசயண பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை லாரியில் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மல்லை இந்து பாரம்பரிய கலாச்சார பாதுகாப்பு சங்கம் துவக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காஞ்சீபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது தமிழக சட்டசபையை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கேலி கூத்து நடைபெறும் இடமாக மாற்றிவிட்டனர். ஏற்கனவே நான் சொன்னது போல சட்டசபை துகில் உரியும் இடமாக மாறிவிட்டது.
சட்டசபை விவகாரத்தில் சபாநாயகரிமும் தவறு இருக்கிறது. தி.மு.க.வின் மீதும் தவறு இருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்ட போது 2 நாளிலேயே பெரும்பான்மையை நிரூபித்தார்கள்.
உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு அடுத்த மாதமே தேர்தல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில், மோடி அரசின் பண மதிப்பு நீக்கத்தினை கண்டித்து காஞ்சீபுரம் காந்திரோடு, பெரியார் நினைவு தூண் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடை பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுந்தர மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் ஆர்.வி.குப்பன், காஞ்சீ.ஜீவீ.மதியழகன், அளவூர் நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் மிகவும் சிறப்பான ஆட்சியை தந்தவர் காமராஜர். புதிய அணை கட்டுகள், பாலங்கள், சர்க்கரை ஆலைகள் போன்றவை அவரது காலத்திலேயே அமைக்கப்பட்டன.
புரட்சிகரமான மதிய உணவு திட்டத்தினை காமராஜர் கொண்டு வந்தார். உழைப்பால் உயர்ந்த அவர் மக்களுக்காக 8 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் இந்தி எதிர்ப்பு, பஞ்சம் முதலிய காரணங்களால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.
50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில் நாட்டிற்காக உயிர் நீத்த தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரால் காங்கிரஸ் கட்சி இன்றும் எழுச்சியோடு உள்ளது. காங்கிரஸ் கட்சியினை சோனியா காந்தி, இளம் தலைவர் ராஜீவ் காந்தியும் சிறப்பாக வழிநடத்துகின்றனர்.
தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் வேறு கட்சியாக இருந்தால் காணாமல் போய் இருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி எழுச்சியோடு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள 2 லட்சம் கோடி கருப்பு பணத்தை ஏழை மக்களின் வங்கி கணக்கில் டொபாசிட் செய்வேன் என வாக்களித்த மோடி இன்று எளிய மக்களின் பணத்திற்கு வேட்டு வைத்துள்ளார். பொருளாதார மேதை மன்மோகன் சிங் எழுப்பும் கேள்விகளுக்கு மோடி பதில் சொல்ல வில்லை.
எம்.ஜி.ஆரை தான் உலகம் சுற்றும் வாலிபர் என சொல்வோம். ஆனால் மோடி இரண்டு ஆண்டுகளில் 65 நாடுகளுக்கு சென்றுள்ளார். மக்களை சந்திக்கும் தலைவராக ராகுல்காந்தி உள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த போது ராகுல்காந்தி அவரை வந்து பார்த்தார். ஆனால் 72 நாட்களில் மோடி வரவில்லை. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், புயல், வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய முறையில் வறட்சி நிவாரணம் தர மத்திய அரசு முன்வரவில்லை. இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.
தற்போது மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதால் உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றிபெறும். சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பினை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
ஜாதி கட்சிகள், சிறிய கட்சிகள், சினிமா நடிகர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தை ஆள்வோம் என கூறும் போது 150 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்காதா? எனவே நாங்கள் காமராஜர் ஆட்சியினை அமைப்போம். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் அண்ணாதுரை, இராம.நீராளன், பத்மநாபன், டி.சி.டி. சுகுமார், சங்கரலிங் கம், பச்சையப்ப நாயக்கர், வீரபத்திரன், பூபதிநாயுடு, சாலபோகம் அருண், முத்தியால்பேட்டை ராஜசேகர், அன்பு, நாதன், அருண், கணேஷ், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






