என் மலர்
செய்திகள்

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் அறிக்கையில் 500 மதுக்கடைகளை மூடுவது என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று முன்னாள் முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தற்போதைய முதல்- அமைச்சர் அது பற்றி தனது முதல் அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர் பார்த்தேன்.
அதுபற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக சட்டசபையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நடந்து கொண்டது ஏற்புடைய தல்ல. தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் தேர்ந்து எடுக்கப்பட்ட இரு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் நடந்து கொண்டனர். இது சட்ட சபை வரலாற்றில் பெரிய அவமானத்தை இருகட்சிகளும் ஏற்படுத்திவிட்டன.
தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை-கொலை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
சட்டசபையில் யாருக்கு வேஷ்டி இருக்கிறது, யாருக்கு சட்டை இருக்கிறது என்று கூட தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமிகள் கொலை மற்றும் பெண்கள் வன்கொடுமை நடந்ததை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.