என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விண்வெளி புரட்சி வருவதாக கோவையில் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி
    X

    விண்வெளி புரட்சி வருவதாக கோவையில் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி

    • கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை
    • சந்திராயன்-3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம் அமைக்க வேண்டுகோள்

    கோவை,

    இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொறியியல் படிப்புகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்தியாவை நோக்கி நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்பதை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    குறிப்பாக ஜப்பானில் நிறைய வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. அங்கு இளைஞர்கள் குறைவு என்பதால் அந்த வேலை வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    கணிணி மட்டுமே முக்கியம் இல்லை. மற்ற பொறியியல் துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். கணிணி மட்டுமே என்பதை தாண்டி பிற துறைகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது.

    5 ஆண்டுகள் கழித்து கணிணி கோடிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. பொறியியல் படித்தால் வாழ்நாள் சிறப்பாக இருக்கும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது.

    செல்போன் டவர் இல்லாமல் செயற்கைகோள் மூலம் இயக்கும் கைபேசி, அடுத்த தலைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. குலசேகரப்பட்டணத்தில் அமையும் ஏவுத்தளம், உலகின் மிகச்சிறந்த மையமாக அமையும்.

    வர்த்தகரீதியில் தினம்-தினம் ஏவுகணைகள் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். நிலவை நோக்கிய பயணங்கள், பல மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. வெப்பமயமாக்கலை தடுக்கமுடியும்.

    அடுத்த கட்ட ஆராய்ச்சி-நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருப்பதை எடுத்து வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

    நிலவில் இருந்து தனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில டன்கள் எடுத்து வந்தாலே போதும். அதற்காக சில கட்டமைப்புகளை நிலவிலும் உருவாக்க முடியும்.

    அதற்கு நிறைய தொழில்நுட்பம், ஆட்கள் தேவையாக இருக்கும். பொறியியல் படித்தவர்கள் அதிகம் தேவைபடுவார்கள். எனவே மாணவர்கள் பொறியியல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    விண்வெளி படிப்புகள் நிறைய வரவே ண்டும் என்பதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு ஸ்டெம் மையங்கள் ஏற்படு த்தப்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.சந்திராயன் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. நம்முடைய முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. நிலவில் நீர் இருப்பதும், துருவப்பகுதியில் சந்திராயன் இறக்கி உள்ளதும் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது.

    விண்வெளியின் பருவநிலையை புரிந்து கொள்வதும் முக்கியம். விண்வெளி துறை போல விவசாயத்துறையை கொண்டு வர வே ண்டும், அதை நோக்கிய பயணங்களும் சிறப்பாக உள்ளன.விண்வெளிக்கு போய்வரும் தொழில்நு ட்பத்தை வைத்து விமான பயணத்தையும் மாற்ற முடியும். ராக்கெட் தொழில் நுட்பத்தில் சீக்கிரமாக, பத்திரமாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

    நிலவுக்கு செல்ல பிறநாடுகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இந்தியா தான் செல்ல வேண்டும் என்பதைத் தாண்டி உலகமே செல்ல வேண்டும்.

    சந்திராயன்-3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இருக்கிறோம். அதை நோக்கிய விவாதங்கள் போய் கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×