search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனிப்பொழிவு அதிகரிப்பு; உடன்குடி வட்டார பகுதியில் இந்த ஆண்டு மழை பெய்யுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் குளத்தை படத்தில் காணலாம்.

    பனிப்பொழிவு அதிகரிப்பு; உடன்குடி வட்டார பகுதியில் இந்த ஆண்டு மழை பெய்யுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • உடன்குடி வட்டார பகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
    • கடந்த ஆண்டு இங்குள்ள குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 18 கிராம ஊராட்சி ஒரு பேரூராட்சி உள்பட பெரும் பகுதியாகும். இங்கு சுமார் 75 சதவீத பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. அதுவும் செம்மணல் நிறைந்த தேரிபகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இங்கு ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, நிலக்கடலை, சப்போட்டா, மா, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு இங்குள்ள தாங்கைகுளம், சடையனேரி குளம், தருவைகுளம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன. திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீராகவே காட்சி தெரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் எந்த குளமும், நிரம்பவில்லை. இப்படியே இந்த ஆண்டு மழை ஏமாற்றி விடுமோ?என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் தேங்க கூடிய பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தற்போது விளையாட்டு மைதானம் ஆக்கி கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

    இன்னும் சில இடங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திவிட்டனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,

    மழை வருமா? குளங்கள் நிரம்புமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குளங்களை எல்லாம் முழுமையாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு குளங்கள், குட்டை கள் முழுமையாக நிரம்ப வில்லை என்றால் அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறி போகும் என்றார்.

    இதேபோல் சமூக ஆர்வலர் சிவலூர் ஜெயராஜ் கூறும்போது, இதோ வருகிறது, அதோ வருகிறது என்று அனைத்து குளங்களும், குட்டைகளும், புதியதாக உருவாக்கப்பட்ட ஊரணிகளும், மழைக்காக தண்ணீருக்காக, காத்தி ருக்கின்றது. ஆனால் இப்பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் தான் மழை குறைந்துவிட்டது. என்று பலர் கூறுகிறார்கள்.

    அதனால் தமிழக அரசு, மாவட்ட கலெக்டர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி பல இடங்களில் வீணாக செல்லும் மழை தண்ணீரை கொண்டு வந்து உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    சடையனேரி கால்வாய்யை நிரந்தர கால்வாயாக அறிவித்து அடிக்கடி தண்ணீர் திறந்து குளங்கள் மறறும் குட்டைகளில் தண்ணீர் தேக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் இனியும் மழையை நம்பி காத்திருக்காமல் இங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    Next Story
    ×