search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் கனமழை; ஒரே நாளில் 228.20 மி.மீ. மழை அளவு பதிவு
    X

    தஞ்சை சாந்த பிள்ளைகேட் ரயில்வே கீழ்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர்.

    தஞ்சை மாவட்டத்தில் கனமழை; ஒரே நாளில் 228.20 மி.மீ. மழை அளவு பதிவு

    • சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.
    • ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது.

    மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே ஊர்ந்து சென்றனர்.

    பலர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று கொண்டனர்.

    சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலை ரவுண்டானாவில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் பெருமளவில் தேங்கி நின்றதால் அந்த வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தஞ்சை நகரில் சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

    அந்த இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் போன்றவற்றில் புத்தாடைகள் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரம் கனமழையால் பாதிக்கப்பட்டது.

    தள்ளுவண்டி, தரைக்கடை மூலம் நடைபெற்ற வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தான் அதிகபட்சமாக 73 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதேபோல் திருவையாறு, வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி, குருங்குளம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இன்றி காணப்பட்டதால் குறுவை இறுதி கட்ட அறுவடை பணிகள்‌ மும்முரமாக நடந்து வந்தன.

    தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்து விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குறுவை நெல் நனைந்தது.

    சாலைகளில் தர்பை போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த நெல் மணிக்குள்ளும் மழைநீர் ஊடுருவி சென்றதால் ஈரப்பதமானது.

    இதே போல் அறுவடைக்காக காத்திருக்கும் குறுவை நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் மேலும் நனையும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தஞ்சாவூர்-73, வல்லம் -38, பாபநாசம் -29, மதுக்கூர் - 18, மஞ்சளாறு -9.20, அய்யம்பேட்டை-8, பூதலூர் -7.40, கும்பகோணம் -6.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 228.20 மி.மீ. மலை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×