என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை, நீலகிரியில் பலத்த மழை
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது.
- சாலைகளில் தேங்கிய தண்ணீரால், வாகனங்கள் ஊர்ந்தபடியே வந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது.
ஊட்டி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளான காந்தல் உள்பட பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பலத்த மழை பெய்தது.
இதனால் ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, கலெக்டர் அலுவலக சாலை மற்றும் தாவரவியல் பூங்கா செல்லும் சாலை என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால், சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள், மழையில் நனைந்தபடியே சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
கோவை மாவட்டத்திலும் சில தினங்களாக சிதோஷ்ண நிலையே நிலவி வருகிறது. பகல் வேளையிலும் வெயில் இல்லாமல், குளிர்ச்சியான காலநிலையே நிலவி வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்தது.
நேற்று நள்ளிரவில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம், ராமநாதபுரம், காந்திமாநகர், சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல பகுதிகளில்தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால், வாகனங்கள் ஊர்ந்தபடியே வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பெரியநாயக்கன்பா ளையம் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால், அங்குள்ள பாலத்திற்கு கீழே தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கி கொண்டனர். சிலர் வாகனங்களை தள்ளியபடியே சென்றனர்.
புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






