என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் தீப்பிடித்து எரிந்த அரசு சுற்றுலா பஸ்: பயணிகள் ஓட்டம்
- பஸ் என்ஜின் பழுதாகி தீப்பற்றி எரிந்தது.
- பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி கடற்கரை, மெரினா கடற்கரை, ஈடன் பீச், சுண்ணாம் பாறு படகு குழாம், திருக்காஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புதுச்சேரி அரசு சாலை போக்குரவத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பி.ஆர்.டி.சி. மினி பஸ் சின்ன வீராம்பட்டினம் பகுதிக்கு சென்றுவிட்டு, 6 பெண்கள் உட்பட 10 சுற்றுலா பயணிகளுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது.
அப்போது ஓடைவெளி அரசு ஆரம்பப் பள்ளி எதிரே வந்தபோது, பஸ்சின் என்ஜின் பழுதாகி தீப்பற்றி எரிந்ததுடன் அதிலிருந்து அதிக புகை வெளியேறியது. இதை கண்டதும் சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். அப்போது உயிர்பிழைத்தால் போதும் என்று எண்ணி பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.
பின்னர் டிரைவரும், கண்டக்டரும், என்ஜினில் இணைக்கப்பட்ட பேட்டரி வயரை கழற்றி விட்டு தீ விபத்தை தடுத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






