search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தி அரசு பஸ் சிறைபிடிப்பு - கம்யூனிஸ்டு போராட்டம்
    X

    சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தி அரசு பஸ் சிறைபிடிப்பு - கம்யூனிஸ்டு போராட்டம்

    • முள்ளக்காடு முதல் முத்தையாபுரம் வரை 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்
    • பள்ளி, கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் சென்று வருவதற்கும் நகர பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் முத்தையாபுரம் வரை 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பெரும் பகுதி உப்பளம் கட்டுமானம் மற்றும் மூடை சுமக்கும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி ஆகும்.

    இங்கிருந்து தூத்துக்குடி அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் சென்று வருவதற்கும் நகர பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை.

    இதனால் தினசரி மாணவர்கள் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. உரிய நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு போக முடியாமல் அவதிப்பட்டனர்.

    நின்று செல்ல கூடிய நகர பஸ்களும், நிறுத்தங்களில் முறையாக நின்று செல்வதில்லை இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை இருந்து வந்தது.

    இதனை கண்டித்து கூடுதல் பஸ்களை இயக்க கோரியும், முறையாக பஸ் நிறுத்தங்களில் நகர பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தியும், தூத்துக்குடி புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜா தலைமையில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் இன்று காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை முத்தையாபுரத்தில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

    கட்சியின் புறநகர் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, குழு உறுப்பினர்கள் பூராடன் வெள்ளைச்சாமி சுப்பையா, வன்னிய ராஜா, கிளைச் செயலாளர்கள் கிருஷ்ண பாண்டி காசிராஜன், வாலிபர் சங்கம் புறநகர் தலைவர் ஜான்சன், வாலிபர் சங்க புறநகர செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் சுரேஷ் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினசரி காலை நேரத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியாக ஊழியர்கள் நியமித்து கண்காணிக்கபடும் என்றும் கூடுதல் பஸ்கள் இயக்க நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×