search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை
    X

    கைது செய்யப்பட்டவரின் படத்தை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா காண்பித்தபோது எடுத்த படம்.

    பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை

    • குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
    • குற்றம் செய்வதற்கு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் காரணம்.

    சென்னை

    சென்னை-மதுரை 'வைகை' எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த வடமாநில இளைஞர்களை தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சரமாரியாக தாக்கினார். ஓடும் ரெயிலில் நடந்த இந்த தாக்குதலை சக பயணி ஒருவர் செல்போனில் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த 'வீடியோ' வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆலோசனையின் பேரில் சென்னை சென்டிரல் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    மேலும் ரெயில்வே 'சைபர் கிரைம்' போலீசாரும் தாக்குதல் வீடியோ பதிவை ஆய்வு செய்தனர். இதில் வடமாநில இளைஞர்களை தாக்கியது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை ரெயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெயிலில் கூட்ட நெரிசலில் வடமாநில பயணி இடித்து விட்டதால் உணர்ச்சிவசப்பட்டு அவரை அடித்து விட்டதாக மகிமைதாஸ் தெரிவித்தார். ஆனால் இந்த தாக்குதல் 'வீடியோ'வில், 'நீங்கள் எதற்கு இங்கு வருகிறீர்கள், நாங்கள் தான் இருக்கிறோமே, இனிமேல் எல்லா வேலையையும் நாங்களே செய்து கொள்கிறோம். நீங்கள் உங்கள் ஊருக்கே சென்று விடுங்கள் என்று வசைபாடுவது பதிவாகி உள்ளது. எனவே இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு மொழி ரீதியாக வசைபாடுதல், ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மகிமைதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

    கடந்த 16-ந்தேதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர் மேல் கொல்லம் மாவட்டம் குன்னாகோட்டை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள், குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ அல்லது ரெயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்.

    தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக 'ஆபரேஷன் 3' வேட்டை ரெயில்வே போலீசாரால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 நாளில் மட்டும் 229 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்குள் வருவதால் வேலைவாய்ப்புகள் குறைவதாக சொல்லப்படுவது ஏற்புடையது அல்ல. அதேபோன்று ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயிலில் பெண்கள், பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களில் வட மாநிலத்தவர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்பதும் ஏற்புடையது அல்ல. குற்றம் செய்வதற்கு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் காரணம். இந்த மொழி பேசுபவர்கள், இந்த ஊரை சேர்ந்தவர்கள் தான் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×