search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம் முழுவதும் கொளுத்தும் வெயிலால் கோலி சோடாவுக்கு மீண்டும் மவுசு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகம் முழுவதும் கொளுத்தும் வெயிலால் கோலி சோடாவுக்கு மீண்டும் மவுசு

    • குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது.
    • கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், சூரிய பகவானின் உக்கிரம் இன்னும் தணியவில்லை.

    இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் அதிகாலையிலேயே வியர்வையில் குளித்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, பதனீர் போன்றவற்றை வாங்கி அருந்தும்படி கூறியுள்ளனர்.

    டாக்டர்களின் அறிவுரைப்படி இயற்கை பானங்களை தேடி செல்லும் மக்களின் பார்வை தற்போது கோலி சோடா பக்கமும் திரும்பி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான கோலி சோடா, ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழுத்துபாணி கண்ணாடி பாட்டில்களில் விற்பனைக்கு வந்தது.

    சாதாரண பெட்டிக்கடைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கோலி சோடாக்களின் விலை சாமானிய மக்களும் வாங்கும் அளவுக்கு இருந்ததால் இதனை அதிகமானோர் விரும்பி வாங்க தொடங்கினர். குறிப்பாக வெயிலில் அலைந்து திரும்புவோர், கோலி சோடா ஒன்றை வாங்கி அருந்தி மகிழ்ந்தனர்.

    குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது. அதன்பின்பு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற கோஷம் கிளம்பியபோது, கோலி சோடாவுக்கும் ஆதரவாக குரல் எழும்பியது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் கோலி சோடாவின் வரவு மீண்டும் தொடங்கியது.

    தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்களின் பார்வை மீண்டும் கோலி சோடா பக்கம் திரும்பி உள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கோலி சோடாவுக்கு மக்கள் மத்தியில் மீண்டும் மவுசு அதிகரித்து உள்ளது.

    கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர். இவை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.150 வரை விற்பனை ஆகிறது. இளம் தலைமுறையினரும் இப்போது கோலி சோடா பக்கம் பார்வையை திருப்பி உள்ளதால் சென்னையில் கோலி சோடா விற்பனை சூடு பிடித்து வருகிறது.

    Next Story
    ×