என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்
- பயணி பாஸ்போர்ட்டை கிழித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் ேசாதனை செய்தனர்.
பீளமேடு:
கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் வந்தது.
இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் ேசாதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரின் பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அந்த வாலிபரை மேல் விசாரணைக்காக அழைத்தனர்.
அப்போது வாலிபர், வர மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தான் கையில் வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் கிழித்து வீசினார்.இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தை சேர்ந்த முகமது சாலிக் வயது(39) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார் என்ற தகவல்கள் பாஸ்போர்ட்டில் இருப்பதால், அதனை பார்த்து அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் கிழித்த தாகவும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.






