என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூரில் பேக்கரி உரிமையாளர் உள்பட 3 பேரை தாக்கிய கும்பல்
- கடன் கொடுக்க மறுத்ததால் ரவுடிகள் என கூறி அட்டகாசம்
- அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்
கோவை,
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் மஜித்(வயது51).
இவர் அன்னூர் சத்தி ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அப்துல் ரகீம் (40) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
மஜித்தின் கடை அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிலர் பேக்கரிக்கு வந்து கடனுக்கு சாப்பிட்டு விட்டு சென்றனர்.
சம்பவத்தன்று இதே போல இவர்கள் பேக்கரிக்கு வந்தனர். அவர்களிடம் காசாளர் அப்துல் ரகீம் உரிமையாளர் கடன் கொடுக்க கூடாது என கூறி உள்ளார். எனவே நீங்கள் பணத்தை கொடுத்து விட்டு சாப்பிட்டு செல்லுங்கள் என கூறினார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் நாங்கள் யார் தெரியுமா நாங்கள் அன்னூர் ரவுடிகள் எங்களிடமே நீ பணம் கேட்கிறாயா என கூறி கடையில் இருந்த டேபிள் சேர் ஆகியவறை எட்டி உதைத்தனர். பின்னர் சேரால் காசாளர் அப்துல் ரகீமின் தலையில் தாக்கினர்.
இதனை பார்த்த கடையில் உரிமையாளர் மஜித் தடுப்பதற்காக சென்றார். அவரையும் தொழிலாளர்கள் தாக்கினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற அப்துல்லா என்பவர் தட்டிக்கேட்டார். அவரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு சென்றனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடிகள் என கூறி கடன் கொடுக்க மறுத்த பேக்கரி உரிமையாளர் உள்பட 3 பேரை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.






