search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூரில் கியாஸ் கசிந்து தீ விபத்து- 2 வடமாநில தொழிலாளர்கள் பலி
    X

    அன்னூரில் கியாஸ் கசிந்து தீ விபத்து- 2 வடமாநில தொழிலாளர்கள் பலி

    • எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது.
    • தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு என எதிர்புறத்தில் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் உள்ள அனுராக் சிங் (வயது28), தன்ஜெய் சிங் (33), தரம்வீர் (40), வீரேந்திரஜா (37), மகாதேவ் சிங் (23) ஆகிய 5 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் தொழிற்சாலையின் எதிர்புறம் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 11-ந் தேதி இரவு அறையில் 5 தொழிலாளர்களும் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது. சற்று நேரத்தில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. இதில் இவர்கள் 5 பேரும் தீயில் சிக்கி கொண்டு அலறினர்.

    இவர்களது சத்தம் கேட்டு அருகே வசிக்கும் தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அறைக்குள் 5 பேரும் தீயில் உடல் கருகி சத்தம் போட்டபடி நின்றனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களில் 4 பேர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அனுராக் சிங் மற்றும் துப்ராவை சேர்ந்த தன்ஜெய்சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

    மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×