என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- தமிழகம் முழுவதும் 300 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
- போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தில் உள்ள உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டுமென ஆற்றின் இரு பக்கமும் உள்ள குமாரநத்தம், துறையூர், கோடங்குடி, வரவுகுடி, நிம்மேலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நிரந்தர தடுப்பணை அமைக்க வலியுறுத்தி ஆற்றில் இறங்கும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனை அடுத்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் விரைவில் தடுப்பணை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேசிய காவிரி படுகை பாது காப்பு சங்க தலைவர் இமயவரம்பன் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுவதும் 300 தடுப்பணைகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது அதில் ஒன்றாக பணமங்கலம் உப்பனாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் அதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.






