என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் கவலை
- வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்து வருகிறது.
- சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
உடுமலை:
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்து வருகிறது.
ஆனால் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வனம் பொழிவு இழந்து ஆறுகளிலும் நீர் வரத்து நின்று விடுகிறது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக பசி, தாகத்தோடு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவார பகுதியை நோக்கி வருவது வாடிக்கையான நிகழ்வாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு நிலவிய கோடை வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்து விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வனம் பசுமைக்கு மாறினாலும் ஆறுகளில் பெரிதாக நீர்வரத்து இல்லை. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருவதுடன் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வளையபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலங்களுக்குள் புகுந்த யானைகள் மின்சார வேலி மற்றும் தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. இது குறித்த தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வருகை தந்த வனத்துறையினர் பார்வையிட்டனர். சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






