என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் தாண்டியது- விவசாயிகள் மகிழ்ச்சி
- மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
- ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விளைபொருட்களில் பணப்பயிர் என்று அழைக்கப்படுவது கரும்பும், மஞ்சளும் ஆகும். ஈரோடு மஞ்சளுக்கு இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை இல்லாமை, புதிய நோய் பாதிப்பு போன்ற காரணங்களினால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையே விலை கிடைத்ததால் விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈரோடு மஞ்சள் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி குவிண்டால் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாய பெருமக்கள் மஞ்சள் பயிரிடும் பணியில் ஆர்வம் காட்ட தொடங்கினர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக மஞ்சள் மார்க்கெட் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
பிறகு மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்கள் காரணமாக மஞ்சள் மார்க்கெட் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெற்றன. இதனால் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை சற்று விலை குறைந்து விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.நேற்று ஈரோடு வெளிமார்க்கெட்டில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 6 ஆயிரத்து 941 முட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதில் 3 ஆயிரத்து 119 மூட்டைகள் விற்பனையானது. சேலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 59 முதல் ரூ.15 ஆயிரத்து 93 வரை ஏலம் போனது. இதேபோல் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 519 முதல் ரூ.14 ஆயிரத்து 539 வரை ஏலம் போனது.
மேலும் ஈரோடு சொசைட்டியில் உள்ள விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 569 முதல் ரூ.14 ஆயிரத்து 899 வரை ஏலம் போனது. இவ்வாறு மீண்டும் மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரத்தை கடந்து விற்பனையாவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.






