search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு வாரத்திற்கு ஒரு கோடி முட்டை ஏற்றுமதி
    X

    நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு வாரத்திற்கு ஒரு கோடி முட்டை ஏற்றுமதி

    • நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு முட்டை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசித்தனர்.

    கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கோழி பண்ணையாளர் சங்க தலைவர் சிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது,

    8 கோடி முட்டைகள் ஏற்றுமதி

    இந்தியாவில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு முட்டை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. துபாய் மஸ்கட், கத்தார், ஆப்பிரிக்கா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகள் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. உக்ரைன் போரால் பல நாடுகளில் கோழி தீவன பொருட்களின் விலை உயர்ந்து முட்டை உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.

    சர்வதேச தரம்

    வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் முட்டை தயாரிக்கும் கோழிப்பண்ணைகள் நாமக்கல் மண்டலத்தில் உருவாகி வருகிறது. இதனால் ஏற்றுமதிக்கு தடையில்லா சான்று பெற்று முட்டையை எளிதாக ஏற்றுமதி செய்ய முடிகிறது.

    முதன்முறையாக

    தற்போது முதன்முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஆர்டரின் பெயரில் சென்னையில் இருந்து ஏர் கார்கோ விமான மூலம் கடந்த வாரம் 54,000 முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வரும் வாரங்களில் முட்டை ஏற்றுமதி மலேசியாவுக்கு தொடர்ந்து நடைபெறும். வாரம் 20 கண்டெய்னர் மூலம் ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    தேவை அதிகரிப்பு

    மலேசியாவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும் அங்கு முட்டையின் தேவை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கிய பிறகு சிங்கப்பூருக்கும் இங்கே இருந்து ஏற்றுமதி செய்யப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×