என் மலர்
ஈரோடு
பவானி:
சித்தோடு அருகே உள்ள வசுவப்பட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவரது நண்பர் பாஸ்கர் (66). இவர்கள் இருவரும் கவுந்தப்பாடியில் சமையல் வேலையை முடித்து விட்டு வேனில் வந்து கொண்டு இருந்தனர்.
ஊத்துக்காடு பஸ்நிறுத்தம் அருகே வேன் வரும் போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக இந்த வேனும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் அப்பளமாக நொறுங்கியது.இந்த இடிபாடுகளுக்குள் டிரைவர் சேகரும், பாஸ்கரும் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு படையினர் அதிகாரி பொன்னாமலை தலைமையில் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கிய சேகரையும், பாஸ்கரையும் மீட்டனர்.
இதன்பிறகு அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சேகர் பரிதாபமாக இறந்தார். பாஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் இன்று பா.ஜ.கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
முன்னதாக பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஸ்மா சுவராஜ் இருநாட்டு மீனவர்களையும், இருநாட்டு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும், மற்றும் அ.தி.மு.க.வும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இப்போது அதுபற்றி பேசிவருவது நியாயமா?
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டோம்.
தமிழ்நாட்டில் உளவு துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். உளவாளி திருப்பூரில் தங்கி இருந்தது வேதனைக்குரியது. உளவுபடை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடும் இதேபோல் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
30 அடிக்கும் கீழே சரிந்த பவானிசாகர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 52.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 205 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்தால் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் தே.மு.தி.க அமைப்பு தி.மு.க.வுடன் இணையும் விழா வரும் 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல்வர் ஆக்குவதுதான் எங்கள் குறிக்கோள். தி.மு.க.வுக்கு வலுசேர்க்க மக்கள் தே.மு.தி.க. தி.மு.கவுடன் சேர முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளையும்- தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். தே.மு.தி.க.வின் ஆணி வேராக உள்ள கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால் கட்சி கலைக்கப்பட்டு பா.ஜனதாவுடன் சேர வாய்ப்பு உள்ளதாக பேசி உள்ளார்.
ஆகவே உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும் தே.மு.தி.க இப்போது செயல்படாத கட்சியாக உள்ளது. கட்சி பொறுப்பு மற்றும் பணியிலிருந்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் விலகி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. அது ஒரு நாடகம்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
போட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன் சேகர் மற்றும் இமயம் சிவகுமார், முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாடார்மேடு வழியாக நேற்று முன்தினம் ஒரு பெண் தள்ளாடிபடியே வந்தார். அவர் தன்னுடன் 10 வயதுள்ள மாற்று திறனாளி சிறுவனை அழைத்து கொண்டு வந்திருந்தார்.
இவர் அந்த வழியாக சென்ற போது திடீர் என்று அந்த சிறுவனை ரோட்டில் உட்கார வைத்து விட்டு சென்றார்.
நேராக அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற அவர் மது குடித்தார். பிறகு வெகு நேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
இதை பார்த்து கொண்டு இருந்த அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவர்கள் சிறுவனின் நிலையை கண்டு பரிதாபப்பட்டனர்.
உடனே இதுபற்றி ஈரோடு சைல்டு லைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த மாற்று திறனாளி சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த நேரத்தில் அந்த சிறுவனை விட்டு சென்ற பெண் மது போதையில் தள்ளாடிபடியே திரும்பி வந்தார்.
இதை பார்த்த சைல்டு லைன் நிர்வாகி ஜெகன் ராஜும், ஆட்டோ டிரைவர்களும் அந்த சிறுவனை அந்த பெண்ணிடம் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதன்பிறகு சோர்வாக இருந்த அந்த சிறுவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அப்போது "இந்த சிறுவனின் தாயார் வந்து கேட்டால் கொடுக்காதீர்கள். சிறுவன் முழுமையாக குணம் அடைந்த பிறகு விசாரித்து விட்டு பிறகு அவனை ஒப்படைக்கலாம்" என்று கூறி விட்டு சைல்டு லைன் அமைப்பினர் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த சிறுவன் எனது மகன் தான். அவன் பெயர் அய்யப்பன் எனவே அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டார்.இதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஷிப்டு மாறும் போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பெண், அந்த சிறுவனை தூக்கி கொண்டு ஓடி விட்டார்.
இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் கூறும் போது அந்த பெண் வைத்திருந்த வங்கி பாஸ் புத்தகத்தில் அந்த சிறுவனின் படம் ஒட்டப்பட்டு அய்யப்பன் கரூர் என்று இருந்தது.
இவனுக்கு மாற்று திறனாளிக்கான உதவி தொகை அந்த வங்கி மூலம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது என்று கூறினர்.
மாற்று திறனாளி சிறுவன் அய்யப்பனை அந்த பெண் எங்கு தூக்கி சென்றார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு:
கோபி அருகே உள்ள கொளப்பலூர் தவடம் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மாமா மாரியப்பன் (60), மனைவி மலர் (30), மற்றும் மகள் பிரியதர்சினி (4) ஆகியோருடன் ஒரு வேனில் சென்றார். வேனை செல்லதுரை என்பவர் ஓட்டினார்.
இந்த வேன் பவானி அருகே உள்ள காளிங்க ராயன் பாளையம் லட்சுமி நகரில் சென்ற போது டிரைவர் ஓரமாக வேனை நிறுத்தினார். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக வேனின் பின்னால் மோதியது. இதில் மாரியப்பன், பிரிய தர்சினி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பழனிச்சாமியும், டிரைவர் செல்லதுரையும் காயம் இல்லாமல் உயிர் தப்பினர்.
படுகாயம் அடைந்த 3 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பழைய பாளையம் ஜி.கே.மூப்பனார் 2–வது வீதியை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 63) வக்கீலாக உள்ளார்.
சென்னைக்கு ஒரு வழக்கு விசயமாக வக்கீல் ராமராஜன் சென்று விட்டார். இதையொட்டி நேற்று இரவு வீட்டு மாடியில் ராமராஜனின் மனைவி மற்றும் மகன், மருமகள் ஆகியோர் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அவரது வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பிறகு வீட்டுக்குள் இருந்த பீரோவையும் உடைத்தனர். இந்த சத்தம் மாடியில் படுத்து தூங்கியவர்களுக்கு கேட்க வில்லை. கொள்ளையர்கள் மிகவும் சாமர்த்தியமாக தங்களது கைவரிசையை அரங்கேற்றினர்.
பீரோவில் இருந்த 29 பவுன் நகைகளை சுருட்டி கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளிக்கொண்டனர். அதன் பிறகு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை சென்னையிலிருந்து திரும்பிய வக்கீல் ராமராஜன் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். அதன் பிறகுதான் மேலே படுத்து தூங்கியவர்களுக்கும் கொள்ளை சம்பவம் தெரியவந்தது.
இந்த துணிகர சம்பவம் குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வக்கீல் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு முனிசிபல் காலனி கல்யாண வினாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). இவருக்கு பேபி என்ற மனைவியும் 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான இவர் மாற்று திறனாளியாக உள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கடந்த 5 வருடத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் அதன்பிறகு வீட்டுக்கு செல்லவில்லை. இவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியாததால் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கி சாப்பிட்டு வந்தாராம். இரவில் எதாவது கடை முன்பு படுத்து தூங்குவது வழக்கமாக இருந்தது.
இதே போல நேற்று இரவும் பழனிச்சாமி ஈரோடு பெரியவலசு நால் ரோட்டில் உள்ள சுப்பிரமணிய நகர் என்ற இடத்தில் உள்ள ஒரு கடை முன்பு படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமிக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளதாக கூப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பழனிச்சாமி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தூங்கி கொண்டிருந்த அவரது தலையில் யாரோ கல்லை தூக்கி போட்டு கொலை செய்து உள்ளனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபேஷ்குமார் மீனா, ஈரோடு டவுன் டி.எஸ்.பி சம்பத் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வருகிறார்கள்.
கடை முன்பு படுத்து தூங்குவதற்காக இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து உள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொலை நடப்பதற்கு முன் பழனிசாமியிடம் தகராறு செய்தவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.






