என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொடுமுடியில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய வாலிபர் 3 பேர் மீது மோதியதால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.
    கொடுமுடி:

    நாமக்கல்லை சேர்ந்தவர்கள் ஷிஜேந்திரன் (வயது 22). விவேக் (21) பொள்ளாச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் (22). வாலிபர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 4 பேர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நடந்த நண்பர் திருமணத்தில் கலந்து கொள்ள காரில் வந்தனர். திருமணம் முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட 3 பேரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு காரில் ஏறினர் காரை ஷிஜேந்திரன் ஓட்டினார். அப்போது அவர் போதையில் இருந்து உள்ளார்.

    கொடுமுடி ரெயில்வே நிலையம் முன் இவர்களின் கார் தாறுமாறாக சென்றது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரர் மீது கார் மோதி அவரை தூக்கி வீசியது. படுகாயத்துடன் அவர் துடித்தார்.

    பிறகு அந்த கார் கொடுமுடி ஊருக்குள்ளும் தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி (50) வடிவேல் (33) ஆகிய தாய்-மகன் மீதும் கார் மோதியது. இதில் தாயும்-மகனும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இரவு 8.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கொடுமுடி போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். போலீசாருடன் பொதுமக்களும் சேர்ந்து தாறுமாறாக ஓடிய காரை விரட்டிச் சென்றனர். 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்ற போலீசார் நொய்யல் செக் போஸ்ட் அருகே காரை மடக்கி பிடித்தனர்.

    அப்போது காரில் இருந்து 4 பேரும் குதித்து தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் ஓடிவிட்டார். ஷிஜேந்திரன், விவேக், முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    தாறுமாறாக காரை ஓட்டிச்சென்ற 3 பேரையும் பொதுமக்கள் அடித்து உதைத்தனர். போலீசார் அவர்களிடமிருந்து மீட்டு 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கார் மோதி படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஈரோட்டில் உறவினர் வீட்டில் 7 பவுன் நகை திருடிய வாலிபரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு,காசிபாளையம் கல்யாணசுந்தரனார் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது24). கூலி தொழிலாளி.

    சந்தோஷ்குமார் நல்லியம்பாளையம், வடுகன் தோட்டத்தில் உள்ள சின்ன மாமியார் நாகஜோதி வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்றும் சந்தோஷ்குமார் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    நாகஜோதி வீட்டில் உள்ள கொக்கியில் தனது 7ž பவுன் தாலிசெயினை தொங்கவிட்டு இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது அந்த தாலிசெயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செயய்தார். தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்த போது அவர் தாலிசெயின் திருடியதை ஒப்பு கொண்டார்.

    அவனிடம் இருந்து திருடபட்ட நகையை போலீசார் மீட்டனர். உறவினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய வாலிபரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரு நகரங்களில் நடக்கும் குற்றங்கள் பற்றி அரசியல் வாதிகள் பேசுவதை போல் கிராமங்களில் நடக்கும் குற்றங்களை, அநீதிகளை அரசியல்வாதிகள் ஏன் பேச மறுக்கிறார்கள் என்று கொளத்தூர் மணி பேசினார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூரில் பகுத்தறிவாளர் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.

    இந்த பயிற்சி வகுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் திராவிட விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மராட்டியம், கார்நாடகாவில் அமலில் இருக்கும் மூட ஒழிப்பு சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும். பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருத பாட தினிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சமஸ்கிருத பாடத்தை தினிக்க கூடாது.

    பெரு நகரங்களில் நடக்கும் குற்றங்கள் பற்றி அரசியல் வாதிகள் பேசுவதை போல் கிராமங்களில் நடக்கும் குற்றங்களை, அநீதிகளை அரசியல்வாதிகள் ஏன் பேச மறுக்கிறார்கள்?

    சென்னையில் நடந்த சுவாதி கொலை பற்றி பேசுபவர்கள் மேட்டூர் அருகே ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனை பற்றி ஏன் பேசவில்லை? ஒரு குழந்தையை கொன்று குடத்தில் அடைத்ததை ஏன் பேசவில்லை. எதற்காக அதை பெரிது படுத்துவதில்லை?

    அது ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனை என்பதால் தானே பேச மறுக்கிறார்கள். இது வருத்தத்துக்குறியது.

    இவ்வாறு கொளத்தூர் மணி பேசினார்.

    மேலும் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், எழுத்தாளர் மணிமாறன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    பெருந்துறை அருகே கிணற்றில் மீன் பிடித்த மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லி பாளையம், பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ரகுராம் (12). இவன் கருமாண்டிசெல்லி பாளையம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்

    நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரகுராம் தனது பாட்டி வீட்டுக்கு சென்றான் அங்கு சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள கொட்டப்பரத்துக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான்.

    அப்போது கிணற்றில் தவறி விழுந்த ரகுராம் நீருக்குள் மூழ்கி விட்டான்.

    பொதுமக்கள் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி தேடி பார்த்தனர். ரகுராம் கிடைக்காமல் போகவே இருட்டி விட்டதால் அங்கிருந்து சென்று விட்டனர்.

    மீண்டும் காலையில் சென்று பார்த்த போது ரகுராமின் உடல் நீரில் மிதந்தபடி இருந்தது. அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி ரகுராமின் சடலத்தை மீட்டனர்.

    மாணவன் ரகுராமின் உடலைபார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது,

    பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணி போட்டியிடும் என்று ஈரோட்டில் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
    ஈரோடு:

    ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ நேற்று ஈரோடு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ஊழல்-பணத்துக்கும் இடையே நடந்த தேர்தல். 2 கட்சிகளும் பணத்தை வாரி இறைத்தன. பணத்துக்காக ஓட்டு விலை பேசப்படுவது-வாக்கு சீட்டுகளுக்கு விலை பேசப்படும் நிலை அரசியல் தர்மம், அரசியல் அறம் ஆகியவற்றை அழித்துவிட்டது.

    மக்கள் நல கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகளும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடும்.

    தமிழகத்தில் நடந்து வரும் படுகொலைகள் பெண் குழந்தைகள் வெளியே சென்று வருவது என்பது அச்சத்துக்கு உரியதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், செல்போன்களில் பார்க்கும் படங்கள் என்று பல உள்ளன.

    இருப்பினும் இதற்கான பிரதான காரணமாக இருப்பது மது அரக்கன் தான். எனவே முழு மதுவிலக்கு என்பது இன்றியமையாதது. 2 மணி நேரம் குறைப்பு, 500 மது கடைகள் அடைப்பு என்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்.

    தமிழக வக்கீல்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கொண்டு வந்த சட்டதிருத்தம் வக்கீல்களின் தொழிலையே பாதிக்கும். எனவே அவர்களின் அறவழியிலான போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது.

    முல்லை, பெரியாறு பிரச்சினை, காவிரியில் கர்நாடகம் அணைகட்டும் பிரச்சினை போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழகத்தின் பரிதாபமான நிலையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசின் கொள்முதல் மையம் மூலம் கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியிருப்பதாவது:–

    ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறைக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இதுவரை 1000 கிலோ கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப் பட்டுள்ளது.

    அகில இந்திய தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும், சாகுபடி பரப்பில் மூன்றாமிடத்திலும் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்–அமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அந்த வாக்குறுதிபடி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக நேரடி கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு கொப்பரை கிலோ 1–க்கு 59ரூபாய் 50 காசு, பந்து கொப்பரை கிலோ 1–க்கு 62 ரூபாய் 40 காசு என்ற ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.

    இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பயனாளி மொடக்குறிச்சி குமாரவலசை சேர்ந்த ஜெகதீஸ் கூறும்போது, “முதல்வரின் இந்த திட்டம் தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நேரடி கொள்முதல் மூலம் விற்றதன் மூலம் எங்களுக்கு லாபம் கிடைக்கிறது” என்று கூறினர்.

    வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண் விவசாயி கூறும்போது, “நாங்கள் 75 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து வருகிறோம் நாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயை தேவைப்படும் சான்றுகளை பெற்று பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பதிவு செய்து உள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறினார்.

    பவானிசாகர் அருகே காயத்துடன் கணவர் இறந்து கிடந்ததால் மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் வேலன் (வயது 45) இவரது மனைவி ஷோபனா (40) இவர்களுக்கு இந்துமதி (16) என்ற ஒரு மகள் உள்ளார்.

    வேலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலை திடீரென அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. திடீரென வேலன் இறந்த விவகாரம் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

    அப்போது அவரது காலில் காயம் இருந்ததை கண்டனர். உடனே இதுகுறித்து அவர்கள் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து புகார் கொடுத்தனர். வேலன் சாவில் மர்மம் இருப்பதாக பரபரப்பு புகார் கூறினர்

    இதையொட்டி பதட்டமான சூழ்நிலை நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    வேலனின் மனைவி ஷோபனாவிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடிபோதையில் தகராறு ஏற்பட்டு வேலன் அடித்து கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல்பாளையம், ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம் பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம்.

    பேரோடு, மாமரத் துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர் பாளையம், கொங்கம்பாளை யம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி.

    இந்த தகவலை ஈரோடு செயற் பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ×