என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த பேரோடு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 25).

    இவர் செல்லப்பாளையம் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மொபட் மீது மோதியது.

    இதில் மொபட்டில் இருந்து தூக்கி எறியப்பட்ட மோகன் ராஜ் பலத்த காயம் அடைந்தார். தலை மற்றும் கால்கள், இடுப்பில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி கண்முன் கணவர் விபத்தில் பரிதாப சாவு திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதியது

    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த 46 புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 53). இவரும் இவரது மனைவி மணிமேகலையும் (37) ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இவர்கள் கொடுமுடி அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்தபோது எதிரே ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து கணவன்– மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். தலையிலும், நெஞ்சிலும் பலத்த அடிப்பட்டு தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தன் கண்முன்னே கணவர் பலியானதை கண்டு மணிமேகலை கதறி அழுதார்.

    விபத்தில் பலியான தங்கராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்ட தனக்கு கருணை அடிப்படையில் வேலை வேண்டி விண்ணப்பித்தார்
    ஈரோடு:

    கோபியை அடுத்த அரக்கன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிமிளா (வயது30). மாற்றுத்திறனாளி மாணவி.

    இவர் தனது அண்ணியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோபியை அடுத்த அரக்கன்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது தந்தை வேலுசாமி. தாய் சரோஜா. கூலி வேலை செய்கிறார்கள்.

    எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே போலியோவால் எனது இருகைகளும், இரு கால்களும் செயல் இழந்து விட்டது.

    மற்றவர்கள் உதவியுடன் வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறேன். தற்போது எம்.ஏ.வரலாறு முடித்துள்ளேன். வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றேன். எந்த பதிலும் இல்லை. எனவே தாங்கள் இந்த விசயத்தில் தலையிட்டு எனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடக்கம். 230 பேர் வனத்துக்குள் சென்று இந்த பணியில் ஈடுபடுகின்றனர்
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஆண்டு தோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

    கடந்த ஆண்டு மட்டும் கணக்கெடுப்பு பணி நடக்கவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக காட்டுக்குள் நுழைந்து வனவிலங்குகளின் கணக்கெடுப்பு நடத்த உள்ள குழுவினருக்கு அந்தந்த வன ரேஞ்சர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்த வன ஆர்வலர்கள் மற்றும் வன படையினர் சத்தியமங்கலம் காட்டுக்குள் புகுந்தனர்.

    சத்தியமங்கலம் வனப் பகுதியில் மொத்தம் 46 வன ‘பீட்’ உள்ளது. ஒவ்வொரு பீட்டுக்கும் 5 பேர் என மொத்தம் 230 பேர் வனத்துக்குள் புகுந்துள்ளனர்.

    இவர்கள் காட்டுக்குள் நீர்நிலைகளில் உள்ள கால் தடங்கள் மற்றும் வனவிலங்குகளின் எச்சங்கள் பற்றி கணக்கெடுத்து என்னென்ன வன விலங்குகள் இங்கு வசிக்கிறது. எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? என்று கணக்கெடுப்பார்கள்.

    குறிப்பிட்ட இடத்தில் யானைகள், காட்டெருமைகள் மற்றும் புலி, சிறுத்தை, கரடிகள் ஆகிய வனவிலங்குகள் தங்கும் இடங்களிலும் துணிச்சலுடன் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த கணக்கெடுப்பு பணி தொடர்ந்து ஒரு வாரம் நடக்கிறது. தினமும் காலை 6 மணிக்கு வனத்துக்குள் புகும் இந்த குழுவினர் இரவு 7 மணிக்குள் வெளியே வந்துவிடுவார்கள்.
    ஆப்பக்கூடல் அருகே லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஆப்பக்கூடலை அடுத்த மூங்கில்பட்டி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது80).

    பழனியம்மாள் சம்பவத்தன்று மூங்கில்பட்டி, ஆப்பக்கூடல்–அத்தாணி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் லோடு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென லோடு ஆட்டோ தனது கட்டுபாட்டை இழந்து பழனியம்மாள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனியம்மாள் தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கோபி அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் உடல் நலம் சரியில்லாமல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.

    இவரது மகள் சுதா (வயது 31) இன்னும் திருமணம் ஆகவில்லை. பிளஸ்–2 வரை படித்துள்ளார். இவருக்கு தந்தை மீது மிகுந்த பாசம் உண்டு.

    தந்தை இறந்ததிலிருந்து மிகவும் வேதனையில் இருந்து வந்தார்.

    அவ்வப்போது வீட்டில் ‘‘அப்பா என் கனவில் வந்து என்னை கூப்பிடுகிறார்’’ என்று கூறி வந்தாராம்.

    இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடு நடந்து வந்தது.

    இதற்கிடையே வீட்டில் சுதா திடீரென வி‌ஷம் குடித்து மயங்கினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கோபி போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை அருகே 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்
    பெருந்துறை :

    பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள கினிப்பாளையம் சுடுகாட்டில் 2 மயில்கள், சுடுகாட்டின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே 4 மயில்கள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஒரு மயில் என மொத்தம் 7 மயில்கள் நேற்று ஒரே நாளில் இறந்து கிடந்தன. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேட்டுப்பதூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜகோபாலுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் இதுகுறித்து பெருந்துறை தாலுகா அலுவலகத்துக்கும், ஈரோடு வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்ததும் பெருந்துறை துணை தாசில்தார் ரவி, ஈரோடு வனவர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த மயில்களை கைப்பற்றி, ஈரோடு கால்நடை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்ததா? என வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×