என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகரில் தினமும் குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவரை கொன்றதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி வேலன் (வயது 45).

    இவரது மனைவி பெயர் ஷோபனா. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 7-ந்தேதி வேலன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வேலன் திடீரென இறந்து விட்டார் என கூறி உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்களும் வந்து குவிந்தனர்.

    ஆனால் வேலனின் உறவினர்களுக்கு அவரது சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

    வேலனின் தங்கை மாலதி கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ஓதிமலையில் வசித்து வருகிறார். அவர் பவானிசாகர் போலீசில் என் அண்ணன் உடலில் ரக்கக்காயம் உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கூறினார்.

    புகாரை பெற்று கொண்ட பவானி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி அதிரடி விசாரணையில் இறங்கினார். சத்தியமங்கலம் துணை சூப்பிரண்டு மோகனும் விசாரணை மேற்கொண்டனர்.

    பிரேத பரிசோதனையில் வேலன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் வேலனின் மனைவி ஷோபனாவை அதிரடியாக கைது செய்தனர்.

    கொலை நடந்த அன்று வேலன் வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது மனைவி ஷோபனா அவரை கண்டித்து உள்ளார். இருவருக்கும் காரசார வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறே கொலையில் முடிந்து உள்ளது.

    கணவரை கொலை செய்தது ஏன் என்பது பற்றி கைதான ஷோபனா போலீசாரிடம் கூறியதாவது:-

    என் கணவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார். தினமும் குடித்துவிட்டு என்னை அடித்து உதைப்பார். சில சமயம் என்னையையும் பிள்ளைகளையும் வீட்டில் அடைத்து வைத்து கதவை பூட்டிக்கொண்டு சென்று விடுவார். ஒரு நாள் அல்லது 2 நாள் கழித்து வந்து வீட்டின் கதவை திறப்பார்.

    இப்படி அவரது கொடுமைக்கு அளவே இல்லாமல் போனது.

    சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்து ரகளை செய்தார். அடித்து உதைத்தார் ஆத்திரத்தில் மண்வெட்டி கட்டையால் அவரை அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    மேற்கண்ட தகவலை அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட ஷோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து உள்ளது.

    பல நாட்களாக 40 அடியிலிருந்து 45 அடி வரை நிலவிய அணையின் நீர் மட்டம் அரைசதம் (50 அடி) போட்டது.

    50 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பரவலான மழையாலும், மேலும் ஊட்டி மலை பில்லூர் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர்திறந்து விடப்படுவதாலும்பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57 அடியை தொட்டது.

    அணைக்கு வினாடிக்கு 2827கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாகவே பருப்பு வகைகளின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    அனைத்து வகைகளின் பருப்புகளுமே ரூ.100–க்கு மேல் விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ. 220 வரை விற்கப்பட்டது. இது போல உளுத்தம் பருப்பின் விலையும் ரூ.200 வரை விற்பனை ஆனது.

    பிறகு இதன் விலை படிப்படியாக குறைந்து இன்று ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.140 க்கும், உளுத்தம் பருப்பு 160 க்கும் விற்கப்படுகிறது.

    இந்த 2 வகை பருப்பு விலை ஓரளவு குறைந்தாலும் இந்த விலையே மிக அதிகம் தான் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் கடலைப் பருப்பு, பொட்டுக்கடலை விலை மிக அதிக அளவில் கூடி உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கடலைப் பருப்பு ரூ.50–க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ஜிவ் என்று ஏறி இன்று ரூ. 120 வரை விற்கப்படுகிறது.

    இது போல பொட்டுக் கடலையின் விலையும் ரூ.80–ல் இருந்து 120 ஆக உயர்ந்து உள்ளது.

    மற்ற பருப்பு வகைகளான பாசி பருப்பு, சுண்டக்கடலை போன்றவற்றின் விலையும் அதிகமாகி உள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ பாசிப்பருப்பு, சுண்டக்கடலையின் விலை ரூ.90–க்கு விற்கப்படுகிறது.இதுவும் கிலோவுக்கு ரூ.20–ல் இருந்து 30 வரை கூடி உள்ளது.

    பருப்பு வகைகளின் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது போதியமழை இல்லாதது தான்.

    இதனால் விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்ட பருப்பு வகைகளை சில பெரிய வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்பதால் இதன் விலைகள் மிக்வும் அதிக அளவில் உயர்ந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் ஈரோடு மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் ஊடு பயிராக பயிறு வகைகள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் இப்போது விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் விலை நிலமாக விற்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலங்களை வாங்கும் ரியல் எஸ்டேட் அதிகாரிகள் பிளாட் போட்டு விற்பனை செய்து வருவதாலும் பயிறு–பருப்பு வகைகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து உள்ளது.

    இதன் காரணமாகவும் இதன் விலை அதிகமாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வக்கீல்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் பெற கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்திலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் ரெயில் மறிப்பு போராட்டம் என நடத்திய வக்கீல்கள் ஈரோட்டில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    ஈரோடு சம்பத் நகரில் உள்ள கோர்ட் வளாகத்தில் இருந்து பெருந்துறை ரோடு வரை வக்கீல்கள் நீண்ட வரிசையில் கை கோர்த்தப்படி நின்றனர்.

    இதில் சில வக்கீல்கள் வாயில் கறுப்பு துணிகளை கட்டி இருந்தனர்.

    மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஈரோடு மாவட்ட பார் அசோசியேசன் தலைவர் அப்புசாமி, செயலாளர் ஜெகதீஸ்வரன், வக்கீல்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியம், செயலாளர் இளங்கோ உள்பட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட வக்கீல்கள் ஏராளமான பேர் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

    கொல்லம்பாளையம் ரூடிஸ் காலனியில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் இன்று இடித்து அகற்றம்

    ஈரோடு:

    நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு சூரம் பட்டி அணைகட்டு பகுதியில் சுமார் 200–க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

    இதேபோல் ஈரோடு கொல்லம் பாளையம் ரூடிஸ் காலனியில் பெரும்பள்ளம் ஓடை அருகே புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடம், வீடுகள் ஆகியவற்றையும் இடிக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையொட்டி அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. அப்பகுதியில் மாடி வீடு கட்டப்பட்டு அதில் 11 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த மாடி வீடும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு வசித்த பொதுமக்கள் மேலும் அந்த பகுதியில் வசித்த பொதுமக்களும் வீட்டை காலி செய்து தங்கள் உடமைகளை எடுத்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று மொடக்குறிச்சி தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    மொடக்குறிச்சியில் ஒன்றிய அளவிலான அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றிய அளவிலான அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    7–வது ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கன்வாடி பணியாளர்கள் சங்கமாவட்ட செயலாளர் மணிமாலை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தார்.

    டியூசனுக்கு போவதாக சென்று மாயமான பள்ளி மாணவர்கள் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட்னர்.

    கோபி:

    கோபியை சேர்ந்த திருமுருகன் என்ற ஜவுளிக்கடை ஊழியரின் மகன் தீபக் (வயது 17). கோபி அடுத்த வெள்ளாளபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் விஜய் (17).

    இவர்கள் இருவரும் பொலவகாளி பாளையத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தனர்.

    நண்பர்களான மாணவர்கள் இருவரும் சிறப்பு வகுப்புக்கு (ஸ்பெ‌ஷல் கிளாஸ்) மாலை நேரத்தில் செல்வார்களாம்.

    இதேபோல் கடந்த 9–ந் தேதி பள்ளிக்கு சீருடையுடன் சென்ற மாணவர்கள் திரும்பி வரவில்லை. போகும்போது இருவரும் வீட்டில் இருந்து பணம், ரேசன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டனர்.

    மாயமான மாணவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர்கள் கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் இது குறித்து விசாரணை நடத்தி மாணவர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் மாயமான 2 மாணவர்களும் பஸ்சில் சேலம் சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த மாணவர்கள் அங்கேயே தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் எடுத்து சென்ற பணம் காலியாகி விட்டதால் என்ன செய்யலாம்? என யோசித்தனர்.

    பிறகு வீட்டுக்கு போய் விடலாமா? வேண்டாமா? என இரு மனதுடன் புதுச்சேரியில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ்சில் நேற்று காலை புறப்பட்டனர்.

    பஸ்சில் வந்த போது மாணவன் விஜய் கண்டக்டரிடம் “அவசரமாக என் அப்பாவிடம் பேசவேண்டும் உங்கள் செல்போனை கொஞ்சம் கொடுங்க” என்று கேட்டான்.

    கண்டக்டரும் அவனிடம் செல்போனை கொடுத்தார். அதை வாங்கிய விஜய் தன் தந்தையிடம் நாங்கள் புதுச்சேரியிலிருந்து சேலத்துக்கு பஸ்சில் வருகிறோம். என்று கூறினான்.

    மகன் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் உடனடியாக இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    உஷாரான போலீசார் பஸ் கண்டக்டரிடம் பேசினார்கள். பிறகு போலீசார் மாணவர்களின் பெற்றோருடன் சேலம் விரைந்தனர்.

    பஸ் சேலம் பஸ் நிலையத்துக்குள் நுழையவும் பஸ்சை மறித்து உள்ளே சென்ற போலீசார் அங்கு இருந்த 2 மாணவர்களையும் மீட்டனர். பிறகு அவர்கள் இரவு 11 மணியளவில் கோபி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். எதற்காக புதுச்சேரிக்கு சென்றீர்கள்? என கேட்ட னர்.

    அதற்கு மாணவர்கள் “பிளஸ்–2 பாடம் படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதனால் புதுச்சேரிக்கு போனோம் அங்கு பார்க்க வேண்டிய இடம் நிறைய உள்ளதால் சுற்றிபார்க்க சென்றோம்“.என்று கூறினர்.

    போலீசார் அவர்களிடம், “இப்படி அம்மா.. அப்பாவிடம் சொல்லி கொள்ளாமல் போகலாமா? அவங்களை பற்றி நினைச்சி பார்த்தீங்களா... இனி இப்படியெல்லாம் செய்யாதீர்கள்”என புத்திமதி கூறி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    தங்கள் மகன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் அவர்களை மகிழ்ச்சியுடன் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். * * * மீட்கப்பட்ட மாணவர்கள் தீபக், விஜய்.

    ×