என் மலர்
செய்திகள்

அரசின் கொள்முதல் மையம் மூலம் கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைத்து வருகிறது: விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியிருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறைக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இதுவரை 1000 கிலோ கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப் பட்டுள்ளது.
அகில இந்திய தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும், சாகுபடி பரப்பில் மூன்றாமிடத்திலும் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்–அமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அந்த வாக்குறுதிபடி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக நேரடி கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு கொப்பரை கிலோ 1–க்கு 59ரூபாய் 50 காசு, பந்து கொப்பரை கிலோ 1–க்கு 62 ரூபாய் 40 காசு என்ற ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பயனாளி மொடக்குறிச்சி குமாரவலசை சேர்ந்த ஜெகதீஸ் கூறும்போது, “முதல்வரின் இந்த திட்டம் தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நேரடி கொள்முதல் மூலம் விற்றதன் மூலம் எங்களுக்கு லாபம் கிடைக்கிறது” என்று கூறினர்.
வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண் விவசாயி கூறும்போது, “நாங்கள் 75 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து வருகிறோம் நாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயை தேவைப்படும் சான்றுகளை பெற்று பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பதிவு செய்து உள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறினார்.






