என் மலர்
ஈரோடு
கோவையில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்ம ஆசாமிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் பஸ் மீது கல்வீச்சு, கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதீய ஜனதா பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு, பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த சம்பவங்களையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அலுவலகங்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த கட்சி அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் ஈரோடு நசியனூர் ரோட்டில் உள்ள இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் பூசப்பன், ஈரோடு சூரம்பட்டியில் உள்ள இந்து முன்னணி மாநில பொருளாளர் சண்முக சுந்தரம், ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மற்றும் இந்து முன்னணி பிரமுகர் ராம்பிரபு ஆகியோரது வீடுகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் கடந்த ஆண்டை விட 10 அடிக்கும் கீழாக தண்ணீர் உள்ளது. இதனால் கீழ் பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யும் அணைக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் விவசாயிகளின் எதிர்பார்பபை மழை பொய்யாக்கி விட்டது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு 72 கனஅடி தண்ணீர் மட்டும் வருகிறது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 53.04 அடியாக உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 53 அடியிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு கூடுதலாக 10 அடி இருந்தால் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடலாம் என்ற நிலையில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டும் என ஒட்டு மொத்த விவசாயிகளும் வருண பகவானை வேண்டியபடி உள்ளனர்.
ஈரோடு:
அம்மாப்பேட்டை அருகே உள்ள பூதப்பாடியை சேர்ந்தவர் இளம்பரிதி. மரம் ஏறும் தொழிலாளி. இவர் தனது மனைவி அன்புக்கரசி, மகன் சந்திரமோகன், மற்றும் மகள் சைலஜாவுடன் மோட்டார் சைக்கிளில் மைசூருக்கு மரம் ஏறும் தொழிலுக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிளில் இவர்கள் பர்கூர் அருகே உள்ள கர்கேகண்டி ரோடு பெரியமலை சுற்று அருகே சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிரே வந்த ஒரு வேன் இளம்பரிதி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளம்பரிதி, அவரது மனைவி அன்புக்கரசி, மற்றும் மகன் சந்திரமோகன், மகள் சைலஜா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரச்சலூர்:
அரச்சலூர் காங்கயம் ரோட்டைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). இவர் அரச்சலூர் பழைய போலீஸ் நிலையம் முன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நாராயணன் மீது மோதியது.
இதில் தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து அரச்சலூர் போலீசில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி அருகே உள்ள ஈச்சம்பள்ளி அகதிகள் முகாமை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் மோகன்ராஜ் (வயது 14) மற்றும் சிவக்குமார் என்பவரது மகன் சிம்சன் (12).
சிறுவர்கள் மோகன்ராஜ் மற்றும் சிம்சன் இருவரும் எழுமாத்தூர்-பாசூர் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சைக்கிளை மோகன்ராஜ் ஓட்டி சென்றான். சிறுவன் சிம்சன் பின்னால் உட்கார்ந்திருந்தான்.
இவர்கள் இடது புறமாக சென்ற போது பின்னால் வந்த ஒரு கார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
மோகன்ராஜை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மற்றொரு சிறுவனான சிம்சனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சிம்சன் இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
டி.என்.பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகளான யானை, கரடி, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே சிறுத்தைகள் வெள்ளாடுகள், மாடுகள், நாய்கள், என கிடைத்தவற்றை அடித்து தின்று விடுகிறது.
கடந்த திங்களன்று மாலை 5 மணியளவில் கொங்கர் பாளையம் பீட் ஆயாகாட்டுத் தோட்டம் அருகே உள்ள மாரியப்பன் என்பவர் தனது வீட்டருகே ஆடுகளை கட்டாந்தரையில் கட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது கர்புர் என உறுமல் சத்தம் கேட்டது. திடுக்கிட்ட அவர் என்னவென்று திரும்பி பார்த்தபோது தனது வீட்டுக்கு எதிரே உள்ள பாறையின் மீது சிறுத்தை ஹாயாக படுத்துக்கொண்டிருந்தது.
இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து மிரண்டு போனார்கள். பிறகு அது வனத்திற்குள் சென்றுவிட்டது. கடந்த மாதத்தில் இதே பகுதியில் மாரியப்பன் தனது வீட்டின் முன்பு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நாயை 2 சிறுத்தைகள் துரத்திக்கொண்டு வந்தது. நாய் படுத்திருந்த மாரியப்பன் மீது தொப்பென்று விழுந்தது.
திடுக்கிட்ட அவர் எழுந்து டார்ச்லைட் அடித்து பார்த்தபோது பனைமரத்தின் கீழ் 2 சிறுத்தைகள் நின்று கொண்டிருந்தது. உடனே பட்டாசை கொளுத்தி வீசியதால் 2 சிறுத்தைகளும் காட்டுக்குள் சென்றுவிட்டது.
இப்படி அடிக்கடி இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதால் இப்பகுதி மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வனத் துறையினரும் ரோந்து வருவதில்லை. என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.
ஈரோடு :
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகள் (விக்கிரகங்கள்) உள்ளது. காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகளுக்கு பூஜையும் வழிபாடும் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி இந்த காந்தி கோவிலில் காந்தி ஜெயந்தி திருவிழா சிறப்பாக நடக்கும். இதேபோல் இந்தாண்டும் வரும் (அக்டோபர்) 2-ந் தேதி ஜெயந்தி விழா உற்சாகத்துடன் கொண் டாடப்படுகிறது.
விழாவையொட்டி வரும் 1-ந் தேதி மாலை 4மணிக்கு வாணி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருகிறார்கள். தீர்த்தத்துடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள் காந்தி கோவிலை அடைந்ததும் அங்கு மகாத்மா காந்தி அன்னை கஸ்தூரிபாய் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் 11 மணிவரை சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனைகள் நடக்கிறது.
விழாவில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு காந்தி - கஸ்தூரிபாயை வழிபடு கிறார்கள்.அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
காலை 11 மணிக்கு மேல் மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. விழாவையொட்டி அன்னதானமும் வழங்கப்படுகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்வது போல் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. ஆனால் ஒரு சில துளிகள் மட்டும் போட்டு விட்டு ஏமாற்றி சென்று விட்டது.
அதே சமயம் ஒரு சில இடங்களில் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்தது.
அந்தியூரில் இன்று காலை 6.30 மணிக்கு பெய்த சாரல் மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இந்த மழையால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியான நிலை இருந்தது.
இதே போல் ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் 15 நிமிடம் சாரல் மழை பெய்தது.
இதே போல் சத்தி வனப்பகுதிகளான திம்பம், ஆசனூரிலும் சாரல் மழை பெய்தது.
கவுந்தப்பாடி அருகே உள்ள பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள மாலக்குட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேற்று மனுநீதி நாள் முகாம் நடக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.
நாங்கள் மாலக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். எங்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறியதன் பேரில் நடந்த 2009-ம் ஆண்டு எங்கள் வீடுகள் அகற்றப்பட்டு அருகே உள்ள நத்தம் என்ற இடத்தில் 20 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.
எங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எங்களுக்கு போதிய குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. போர் வெல்லில் தண்ணீர் இல்லை முற்றிலும் வற்றிப்போய் விட்டது.
தண்ணீர் இல்லாத காரணத்தால் பெண்கள் 3 கி.மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது.
எனவே இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கேட்டுக் கொள்கிறோம். மேலும் சாக்கடை வசதி சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
பெருந்துறை அருகே உள்ள சானிட்டோரியம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி பார்வதி. நேற்று மாலை பார்வதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கியாஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் திடீர் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து புகை வந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிலிண்டர் மீது ஈர சாக்கை போட்டனர். பிறகு சிலிண்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சிலிண்டரை குளிர்ச்சி படுத்தினர். இதையொட்டி தீ முற்றிலும் தடுக்கப்பட்டு அணைக்கப்பட்டது.
சிலிண்டர் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மைசூரில் இருந்து பாலக்காட்டுக்கு குளிர்பானம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுவடவள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரி நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரி, ஓட்டுநர் சிவக்குமார் கிளீனர் முருகேசன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த ஹரிபிரசாத் ஆகியோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் அங்கு வந்த கிராம மக்கள் லாரியில் இருந்து விழுந்த குளிர்பான பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதையறிந்த மேலும் ஏராளமானோர் குளிர்பான பாட்டில்களை எடுத்துச் செல்ல வந்தபோது போலீசார் தடுத்தனர்.
இந்த விபத்து காரணமாக சத்தி மைசூர் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 800 பாட்டில்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் மங்கள படி துறை காவிரி ஆற்றில் ஒருவர் இறந்து கிடந்தார். அவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
ஆற்றில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் மூழ்கி பலியாகி விட்டரா? என்றும் தெரியவில்லை.
இது குறித்து சூரியம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் சித்தோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






